
டெல்லி அணியினரின் சிவப்பு ஜெர்ஸியைக் கழட்டிப் பார்த்தால், உடலும் சிவந்திருக்கும். சாயம் இல்லை, காயம்! பான்டிங், கங்குலியிடம் வாங்கும் ஊமைக்குத்துகளுக்கு இன்றோடு முடிவு கட்டிவிட வேண்டும் என்கிற வெறியில் களமிறங்கியது டெல்லி அணி. ரோசத்தில் உப்பு சேர்த்துவிட்டு விளையாட வந்தால் மைதானத்தில் மழை பெய்து கொண்டிருந்தது, `கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்' எனும் பாடலை ரீல்ஸ் பண்ண தேடிக்கொண்டிருந்தார் வார்னர். `ஆளுக்கு இரண்டு பாயின்ட்ட பிரிச்சு கொடுத்தால், ஒரு பாயின்ட் வந்துடும்ல பாஸ்' என கேட்ட பிருத்வி ஷாவைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் பான்டிங். கடைசியில், மழை நின்று மேட்ச் துவங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.
இன்னும் சரியான ஒபனிங் ஜோடி கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் கொல்கத்தா, இம்முறை ஜேசன் ராய் - லிட்டன் தாஸ் ஜோடியை அனுப்பிவைத்தது. பழம்பெரும் பவுலர் இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். 4வது பந்தில் ஒரு பவுண்டரி தட்டினார் தாஸ். ஆனாலும், ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. 2வது ஓவரை வீசவந்தார் முகேஷ். முதல் பந்திலேயே ஜேசன் ராய் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார். 4வது பந்தில், இன்னொரு பவுண்டரி. இந்த சண்டையில் குறுக்கே சென்று, விக்கெட்டைப் பறிகொடுத்தார் லிட்டன். பந்தைக் கிண்டிவிட்டு ஸ்கொயர் லெக்கில் கேட்சாகி வெளியேறினார். ஆக, இந்த ஓபனிங் ஜோடியும் அம்புட்டுதேன்!
3வது ஓவரை வீசினார் இஷாந்த். 3வது பந்தில், ஒரு பவுண்டரி அடித்தார் ஜேசன் ராய். ஆனாலும், ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. அதிவேக பந்து வீச்சாளர் நோர்க்யா வந்தார். முதல் பந்தை டீப் தேர்டில் பவுண்டரிக்கு செருகினார் ராய். இந்த சண்டையில், குறுக்கே வந்து தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் வெங்கடேஷ் ஐயர். கடந்த மேட்ச் சதமடித்திருந்த வெங்கிக்கு, இம்முறை வாத்து முட்டைதான் கிடைத்தது. அடுத்து களமிறங்கிய கேப்டன் ராணா, நோர்க்யாவை ஒரு பவுண்டரி அடித்தார். முகேஷ் குமாரின் 5வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அப்போதே, கொல்கத்தா ரசிகர்கள் மனசு விட்டார்கள். 6வது ஓவரில், ராணாவின் விக்கெட்டைக் கழட்டினார் இஷாந்த். பவர்ப்ளேயின் முடிவில் 35/3 என பரிதாபமான நிலையில் இருந்தது கொல்கத்தா.
அக்ஸர் வீசிய 7வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மிட்ஷல் மார்ஷின் 8வது ஓவரில், ஒரு சிக்ஸர் அடித்தார் மந்தீப் சிங். கடைசிப்பந்தில், ஜேசன் ராய் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டார் மார்ஷ். அக்ஸரின் 8வது ஓவரில் மந்தீப் சிங் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை பவுலரின் பெயரில் அல்லாமல், மந்தீப் சிங்கின் பெயரில்தான் எழுத வேன்டும். அப்படி ஒரு விக்கெட்! அதிரடி வீரர் ரிங்கு சிங்கை 9வது ஒவரிலேயே இறக்கிவிட்டது கொல்கத்தா அணி. ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரியும் அடித்து பேட் சரியாக இருக்கிறதா என செக் செய்தார்.
10வது ஓவரை வீசவந்தார் குல்தீப். தனக்கு பிடித்தமான குல்தீப்பை ஒரு சிக்ஸர் அடித்து வரவேற்றார் ஜேசன் ராய். 10 ஓவர் முடிவில் 64/4 என மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது கொல்கத்தா. மீண்டும் மழை வந்து மேட்ச் நின்றுவிடக் கூடாதா என வேண்டினார்கள் கொல்கத்தா ரசிகர்கள். அக்ஸரின் 11வது ஓவரில், லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் ரிங்கு சிங். அதே ஓவரின் கடைசிப்பந்தில், நரைன் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார். 12வது ஓவரில் நரைனின் விக்கெட்டைக் கழட்டினார் இஷாந்த். நோர்க்யாவின் 13வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
மார்ஷ் வீசிய 14வது ஓவரில், தனது முதல் சிக்ஸரை அடித்தார் ரஸல். ஜேசன் ராயும் ஒரு பவுண்டரி அடித்தார். ஒரே ஓவரில் 15 ரன்கள். அடுத்த ஓவரை வீசவந்த குல்தீப், ஜேசன் ராயின் விக்கெட்டைக் கழட்டி வழியனுப்பி வைத்தார். 39 பந்துகளில் 43 ரன்கள்! ஜேசன் ராயின் விக்கெட்டை கழட்டியும் ஆத்திரம் அடங்காத குல்தீப், அடுத்த பந்திலேயே அனுகுல் ராயின் விக்கெட்டையும் சேர்த்து கழட்டினார். ராய்னு பெயர் வெச்சது ஒரு பாவமா என பெவிலியனுக்கு திரும்பினார், இம்பாக்ட் வீரர் அனுகுல் ராய். ஹாட்ரிக் பந்தை சந்திக்க வந்தார் உமேஷ் யாதவ். உமேஷ் ராய் என பெயர் வைத்திருந்தால் அவரும் காலியாகி இருப்பார். ஜஸ்ட் மிஸ்! 15 ஓவர் முடிவில் 94/8 என மிக பரிதாபமான நிலையில் இருந்தது கொல்கத்தா.
குல்தீப்பின் சுழல் முடிந்ததும் நோர்க்யாவின் புயல் வந்தது. உமேஷ் யாதவின் விக்கெட்டைக் கழட்டினார் நோர்க்யா. முகேஷ் குமாரின் 17வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. நோர்க்யா வீசிய 18வது ஓவரில், ரஸல் ஒரு பவுண்டரி அடித்தார். குல்தீப்பின் 19வது ஓவரில், 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை வீசவந்த முகேஷை, ஹாட் ட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு 127/10 என இன்னிங்ஸை முடித்தார் ரஸல்.
நேற்று வியாழக்கிழமை என்பதால், மீண்டும் ப்ர்திவி ஷா மீது நம்பிக்கை வைத்து ஓபனிங் இறங்கினார் கேப்டன் வார்னர். உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசவந்தார். 2வது பந்து, பவுண்டரிக்கு பறந்தது. 2வது ஓவரை வீசவந்தார் கெஜ்ரோலியா. முதல் பந்தை, மிட் ஆஃபில் பவுண்டரிக்கு விளாசினார் ஷா. அதே ஓவரில், கஜூரா, காஜுகட்லியைப் போல் இரண்டு ஸ்வீட்டான பவுண்டரிகளை கெஜ்ரோலியாவுக்கு கொடுத்தார் வார்னர். 3வது ஓவரை வீசவந்தார் ரஸல். அந்த ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கேப்டன் வார்னர். 4வது ஓவர் வீசவந்தார் நரைன். 3 ரன்கள் மட்டுமே. அடுத்த ஓவரிலேயே வருணும் வந்தார். முதல் இன்னிங்ஸில் வருண பகவானை வேண்டிய கொல்கத்தா ரசிகர்கள், இப்போது வருணை வேண்டினார்கள். 5வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷா. 3வது பந்தில் க்ளீன் போல்டாக்கி, ஷாவை பெவிலியனுக்கு விரட்டினார் வருண்.
நரைன் வீசிய 6வது ஓவரில், ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி, ஷார்ட் பைனில் ஒரு பவுண்டரி, மிட் ஆனில் ஒரு பவுண்டரி, தரையோடு தரையாக ஒரு பவுண்டரி என லிட்ஸ்ட்டைப் பெரிதாகப் போட்டார் வார்னர். `ஸ்ட்ரைக் ரேட் வேணும்னு கேட்டியாமே' என கண்ணைத் திறந்து காட்டாத குறை. வெல்டன் வார்னர்! அனுகுல் ராய் வீசிய 7வது ஓவரில், 1 ரன் மட்டுமே கிடைத்தது. 8வது ஓவரை வீசவந்தார் கேப்டன் ராணா. 2வது பந்தில், மிட்ஷெல் மார்ஷ் காலி. அடுத்து களமிறங்கினார் ஷால்ட். டெல்லி அணி ரோசத்தில் சேர்த்த உப்பு, இந்த ஷால்ட்தான். சந்தித்த முதல் பந்தே, பவுண்டரிக்கு பறக்கவிட்டார்.
9வது வீசினார் அனுகுல் ராய். ஷால்ட் காலி! டெல்லி ரசிகர்கள் அரண்டு போனார்கள். 2 ஓவர் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, 1 விக்கெட்டையும் தூக்கியிருந்தார் அனுகுல் ராய். அடுத்த ஓவரை வீசிய ராணாவோ, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 10 ஓவர் முடிவில் 73/3 `உன் அளவுக்கு ச்சீ இல்ல' என்பதுபோல் ஆடிக்கொண்டிருந்தது டெல்லி. அனுகுல் வீசிய 11வது ஓவரில், ஒரு பவுண்டரி எடுத்து தனது மற்றுமொரு அரைசதத்தை நிறைவு செய்தார் வார்னர். அதே ஓவரின் 5வது பந்தில், மனீஷ் பாண்டே ஒரு பவுண்டரி விளாசினார். 12 ஓவரை வீசிய வருண், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நரைன், 6 ரன்கள் மட்டும் கொடுத்தார்.
வருண் வீசிய 14வது ஓவரில், கேப்டன் வார்னர் காலி. எல்.டபிள்.யூ ஆகி வெளியேறினார். விக்கெட் மெய்டன் ஓவராக முடிந்தது! நரைன் வீசிய 15வது ஓவரில், மனீஷ் பாண்டே ஒரு பவுண்டரியும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரியும் அடித்தார்கள். `விடுப்பா விடுப்பா, டீமே கேவலமா பேட்டிங் ஆடும்போது ரஸல் மட்டும் நல்லா ஆடுறதும், டீமே நல்லா பவுலிங் போடும்போது நரைன் மட்டும் கேவலமா போடுறதும் சகஜம்தானப்பா' என தேற்றிக்கொண்டார்கள் கொல்கத்தா ரசிகர்கள். 15 ஒவர் முடிவில் 104/4 என விளிம்பில் நின்றுக்கொண்டிருந்தது டெல்லி.
16வது ஓவரை வீசிய அனுகுல் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, மனீஷ் பாண்டேவின் விக்கெட்டையும் கழட்டினார். 24 பந்துகளில் 18 ரன்கள்தான் தேவை என்றாலும், டெல்லி ரசிகர்கள் பீதியில் இருந்தார்கள். 17வது ஓவரில், அமான் கானின் விக்கெட்டைக் கழட்டினார் ராணா. இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. வருண் வீசிய 18வது ஓவரில், 3 ரன்கள். அதில், லலித் யாதவ்வின் ஸ்டெம்பிங் வாய்ப்பை மிஸ் செய்தார் லிட்டன். ஆக, 12 பந்துகளுக்கு 12 ரன்கள் எனும் நிலைமைக்கு மேட்சை இழுத்துக்கொண்டு வந்தது டெல்லி அணி. `வழக்கம்போல ஆடி தோத்திருந்தாலும் அடி கம்மியதான் விழும், இப்படி ஜெயிக்குற மாதிரி ஆடி தோத்தால் அடி வலுவா விழுமே' என டெல்லி அணியினர் உள்ளுக்குள் அழுதுக்கொண்டிருந்தார்கள். 19வது ஓவரை வீசிய ராணா, 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதிலும் அக்ஸர் படேலின் ஸ்டெம்பிங் வாய்ப்பு ஒன்றையும் மிஸ் செய்தார் லிட்டன் தாஸ். `யாரை நம்புறதுனே தெரியல தாஸ்ணா' என கொல்கத்தா ரசிகர்கள் கலங்கினார்கள்.
கடைசி ஓவரை கெஜ்ரோலியாவிடம் கொடுத்தார் ராணா. 6 பந்துகளில், 7 ரன்கள் தேவை. `உமேஷிடம் கொடுத்திருக்கலாமே' என கொல்கத்தா ரசிகர்கள் கண் கலங்கினார்கள். முதல் பந்து, டபுள்ஸ். அடுத்த பந்து, நோ பாலில் டபுள்ஸ். ஃப்ரீ ஹிட் பந்தில் இன்னொரு டபுள்ஸ். ஒருவழியாக ஒரு ஆட்டத்தை வென்றுவிட்டது டெல்லி அணி. 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது கொல்கத்தா. 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய இஷாந்த் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.