பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தேவையான எடையை விட கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக கூறி, ஒலிம்பிக் குழு அவரை தகுதி நீக்கம் செய்ததாக செய்தி வெளியானது ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த காலங்களில் வினேஷ் போகத் விளையாடும் எடைப்பிரிவு 53 கிலோ. ஆனால், அதற்கு வேறொரு வீராங்கனை தகுதி பெற்றதால், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க முடிவு செய்த வினேஷ், அதற்காக 53 கிலோ எடையில் இருந்த தனது உடல் எடையை, 3 கிலோ குறைத்தார். இதனால், தகுதிச்சுற்றில் கூட அவர் பல இன்னல்களை சந்தித்தார். இதன் பிறகே 50 கிலோ எடைப்பிரிவில் தகுதி பெற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த இறுதிப் போட்டியில் அவரின் எடை கூடுதலாக 100 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தவுடன் ஒட்டுமொத்த இந்தியர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஒலிம்பிக்கில் தங்கத்தை வினேஷ் தங்கத்தை பெற்றுவிடுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், இச்செய்தி பேரடியாக இருந்தது.
இது குறித்து பத்திரிக்கையாளர் டி.என் ரகு பேசும் பொழுது... ”இச்செய்தி அனைவரின் மனதையும் சுக்கு நூறாக உடைத்துள்ளது. இந்தியர்கள் இவரை தலைமேல் வைத்து கொண்டாடி வந்த நிலையில், இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட செய்தியானது தலைமேல் இடியை இறக்கி உள்ளது என்றே கூறலாம். இதில் அரசியல் தலையீடு உண்டு என்று கூறுவதற்கு ஏதும் ஆதாரம் இல்லை.
மேலும், இவர் தனது உடல் எடையை 50 வைத்து போட்டியில் விளையாடுவது என்பது சவாலான ஒன்று. நேற்றிலிருந்து இந்தியர் அனைவரும் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிவிடலாம் என்று நினைத்திருந்த சமயம் இந்த பேரடியை யார் ஒருவராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது அவருக்கான தோல்வி இல்லை. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான தோல்வி”
முன்னாள் ஒலிம்பிக் வீரர் தேவராஜ் பேசும்பொழுது
”மல்யுத்த போட்டி, குத்துச்சண்டை போன்ற போட்டிகளுக்கு எடைசரிபார்ப்பு மிகவும் அவசியம். குறிப்பிட்ட எடைக்கு சற்று முள் அதிகரித்து இருந்தாலே அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இவரைப்பொருத்தவரை அவருக்கே தெரியாமல் இது நடந்து இருக்கக்கூடும். கிராம் கணக்கில் எடை குறையும் பொழுது, எதையாவது சாப்பிட்டு இருப்பார்கள் அதனால் எடை கூடி இருக்கலாம். 200 கிராம் என்பது ஒன்றுமே இல்லை.. பயிற்சியாளரிடம் கேட்டால்தான் சரியான காரணம் தெரியும்.” என்றார்.