
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முழங்கையில் ஏற்பட்டுள்ள தொந்தரவு காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சில போட்டிகளை மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் (Gary Stead) தெரிவித்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் இருந்தார். அதே போல ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக கடைசி லீக் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
“இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வில்லியம்சன்னை முன்னெச்சரிக்கை ரீதியாக நாங்கள் களம் இறக்கவில்லை. அவருக்கு முறையான ஓய்வு இருந்தால் நிச்சயம் விளையாட தேறிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாக அவர் முதல் சில போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வாய்ப்புகள் உண்டு.
வில்லியம்சன் பந்தை ஹிட் செய்வதில் அற்புதமான திறன் படைத்தவர். அதை செய்ய அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வளவு தான்” என பயிற்சியாளர் தெரிவித்தார்.
மேலும், “தொடரின் முக்கியமான கட்டத்தில் அவர் அணிக்கு தனது பங்களிப்பை கொடுப்பார் என நம்புகிறோம்” கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.