உலக அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 4x400 மீட்டர் ரிலே பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இறுதி சுற்றை அடைந்திருக்கிறது இந்திய ஆண்கள் அணி. இறுதி சுற்றுக்கு முன்னேறியது மட்டுமல்லாமல் ஆசிய சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.
2023 உலக அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்துவருகிறது. உலகின் பல முன்னணி தடகள நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4x400 மீட்டர் ரேஸுக்கான தகுதிச் சுற்று சனிக்கிழமை நடந்தது. இதன் தகுதிச் சுற்று 2 ஹீட்களாக நடந்தது. இரண்டு ஹீட்டிலும் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் அணிகள் நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். அதுபோக, சிறந்த நேரத்தைப் பதிவு செய்த 2 அணிகள் பைனலுக்கு முன்னேறும்.
இதில் முதல் ஹீட்டில் இந்திய அணி கலந்துகொண்டது. இந்திய அணி சார்பில் முகமது அனாஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வரியாத்தொடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றினர். இதில் ராஜேஷ் ரமேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர். அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், டிரினிடாட் & டொபாகோ போன்ற அணிகள் அந்த ஹீட்டில் இடம்பெற்றிருந்ததால், இந்திய அணிக்கு இது பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிராக்கில் இந்திய வீரர்களோ மாயம் நிகழ்த்தினார்கள்.
ரேஸைத் தொடங்கிய முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கபுக்கு ஆறாவதாக பேட்டனைக் கொண்டு போய்க் கொடுத்தார். மிகச் சிறப்பாக ஓடிய அமோஜ் ஜேக்கப், 4 வீரர்களை முந்தி இரண்டாவதாக வந்தார். அடுத்து ஓடிய முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் இருவரும் அந்த இடத்தைத் தக்கவைக்க, அந்த ஹீட்டில் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்குத் தகுதி பெற்றது இந்தியா. அமெரிக்கா முதலிடத்திலும் பிரிட்டன் மூன்றாவது இடத்திலும் ரேஸை முடித்தன.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை விட அவர்கள் பதிவு செய்த நேரம் இன்னும் பெரிய கொண்டாட்டத்துக்குக் காரணமாக அமைந்தது. இந்த ரேஸை இந்த 4 இந்திய வீரர்களும் இணைந்து 2.59.05 நொடிகளில் முடித்தனர். இது இதற்கு முந்தைய தேசிய சாதனையை தகர்த்தது. இதற்கு முன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் முகமது அனாஸ், நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜிவ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் 3.00.25 என்ற நேரத்தைப் பதிவு செய்திருந்ததே தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இந்த ரேஸில் இந்திய வீரர்கள் தேசிய சாதனையை மட்டுமல்ல, ஆசிய சாதனையையும் முறியடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஓரகனில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 2:59.51 என்ற நேரத்தில் ரேஸை முடித்த ஜப்பான் அணி தான் ஆசிய சாதனையை வசப்படுத்தியிருந்தது. இப்போது அதையும் முறியடித்து சரித்திரம் படைத்திருக்கிறது இந்தியா.
ஒட்டுமொத்த தேசமும் இந்திய வீரர்களின் இந்த செயல்பாட்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது ஆசிய அரங்கில் இந்திய அணி பல வெற்றிகள் குவித்திருந்தாலும், சர்வதேச அரங்கில் கொடுத்திருக்கும் இந்த பெர்ஃபாமன்ஸ் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. அதுவும் இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த அமெரிக்க அணிக்கே சவால் கொடுக்கும் வகையில் செயல்பட்டது அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியது, அமெரிக்க வீரர்கள் உள்பட!
ரேஸ் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமெரிக்க வீரர் ஜஸ்டின் ராபின்சன், "நான் என்னுடைய ஆற்றலை கொஞ்சம் சேமித்து வைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்குப் பின்னால் ஒருவர் வருவதை என்னால் உணர முடிந்தது. அது ஒரு இந்திய வீரர் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது சரியானது இல்லை என்று தெரிந்தது. 'இது சரியில்லை' என்று சொல்லிக்கொண்டே என் வேகத்தை அதிகரித்தேன்" என்று கூறியிருக்கிறார். இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையுமே தங்கள் செயல்பாட்டால் ஆச்சர்யப்படவைத்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.