
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் விளையாட நேர்ந்தாலும் அதனை விளையாடாமல் இருக்க இந்திய அணி தயாராகிக்கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் தொடர்கள் நடத்தப்படவில்லை. இருந்தாலும் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை இந்தியா பலவழிகளில் புறக்கணித்து வருகிறது.
அதன்படி பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் அதிகரித்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த விராட் கோலி, நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு துணை நிற்போம். அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவை மதிப்போம் என்று கூறினார்.
இந்நிலையில் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் விளையாட நேர்ந்தாலும் அதனை விளையாடாமல் இருக்க இந்திய அணி தயாராகிக்கொள்ள வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உலக கோப்பையில் பாகிஸ்தானை புறக்கணிப்பது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும். ஆனாலும் புறக்கணிக்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் விளையாடி கிடைக்கும் இரண்டு புள்ளிகளை விட இராணுவ வீரர்களின் உயிரே முக்கியம். விளையாட்டு, கலை, பாலிவுட், கலாசாரம் இவை எல்லாவற்றையும் விட நாட்டின் மீதான அன்பு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.