
பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, தனது பள்ளி நாட்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக இருப்பவர் எம்.எஸ். தோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும்கூட, ரசிகர்கள் பட்டாளத்தை சற்றும் இழக்காத வீரராக வலம் வருகிறார். தோனி என்கிற பெயரை கேட்டாலே புல்லரித்து போகும் ரசிகர்கள் இன்றும் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, தனது பள்ளிக்காலம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
உங்களுக்கு பிடித்த பாடம் எதுவென்று மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, "விளையாட்டையும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாமா? ஏனென்றால் அதுதான் எனக்கு பிடித்தது. 7ம் வகுப்பில் இருந்து நான் கிரிக்கெட் ஆடுகிறேன். அப்போது இருந்தே பள்ளியில் நான் நடுநிலையான மாணவன் தான். கிரிக்கெட் விளையாட சென்றதால், பள்ளியின் வருகைப்பதிவு சதவீதம் எனக்கு குறைந்துக்கொண்டே சென்றன. இதனால் எனக்கு சிரமங்கள் ஏற்பட்டன.
10ம் வகுப்பில் ஒரு சில பாடங்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. தேர்வில் என்ன எழுதுவது என்றே புரியாத அளவிற்கு கடினமாக இருந்தேன். இதனால் நான் 10ம் வகுப்பு கூட தாண்ட மாட்டேன் என தந்தை முடிவுக்கே வந்துவிட்டார். ஆனால் நான் சிறந்த படிப்பாளி என்றும் நிருபித்துக் காட்டினேன். 10ம் வகுப்பில் 66 சதவீதத்துடனும் 12ம் வகுப்பில் 56 சதவீதத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றேன். ரிசல்ட்டை கேட்டு மகிழ்ச்சியடைந்த முதல் நபர் தந்தை தான்'' என தோனி கூறினார்.
2004ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. கடந்த 2020இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி விளையாடும் போட்டிகள் ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு