
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
டெல்லி அணிக்காக தவான் மற்றும் பிருத்வி ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 7 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர், ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 51 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி.
பிருத்வி ஷா, 34 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார். நடப்பு சீசனின் இரண்டாவது பாதியில் டெல்லி அணிக்காக அரைசதம் பதிவு செய்த முதல் வீரரானார் அவர். நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அக்சர் பட்டேல் 10 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பிருத்வி ஷாவும் அவுட்டானார்.
10.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்திருந்தது டெல்லி. அந்த அணியின் கேப்டன் பண்ட் மற்றும் ஹெட்மயர் களத்தில் இருந்தனர். முதலில் நிதானமாக தங்களது இன்னிங்ஸை தொடங்கிய அவர்கள் சில நிமிடங்களில் தங்களது இயல்பான ஆட்டத்தை விளையாட தொடங்கினர். அவர்களது ஆட்டம் டெல்லி அணிக்கு கம்பேக் கொடுத்தது. இருவரும் இணைந்து 50 பந்துகளில் 83 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ஹெட்மயர், 24 பந்துகளில் 37 ரன்களை எடுத்து அவுட்டானார். பண்ட், 35 பந்துகளில் 51 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னைக்காக ஹேசல்வுட் (2) மற்றும் ஜடேஜா, மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது டெல்லி. 173 ரன்கள் எடுத்தால் சென்னை இந்த போட்டியில் வெற்றி பெறும்.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நடப்பு சீசனுக்கான இறுதி போட்டிக்கு நேரடியாக முன்னேறும்.