இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
ஆனால் டி20 தொடரை கோட்டைவிட்ட இலங்கை அணி, ஒருநாள் தொடரில் ஒரு தரமான கம்பேக் கொடுத்து இந்திய அணியை அதிர்ச்சிக்குள் தள்ளியது. முதல் போட்டியில் 230 ரன்கள் அடித்தபோதும் இந்தியாவை 230 ரன்னுக்கு ஆல் அவுட் செய்த இலங்கை முதல் போட்டியை சமனில் முடித்தது. பின்னர் இரண்டாவது போட்டியில் 240 ரன்கள் மட்டுமே அடித்து இந்தியாவை 208 ரன்களில் சுருட்டி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கும் நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றுவருகிறது.
தொடர்ச்சியாக 3வது போட்டியிலும் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. கடந்த 2 போட்டிகளை போல் அல்லாமல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிஷாங்கா மற்றும் அவிஷ்கா ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டை இலங்கை 89 ரன்களில் இருந்தது போது நிஷாங்காவை 45 ரன்னில் வெளியேற்றி எடுத்துவந்தார் அக்சர் பட்டேல்.
தொடர்ந்து 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி அபாரமாக விளையாடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது 96 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த குசால் மெண்டீஸ் அரைசதமடித்தாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் சோபிக்காத நிலையில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
3வது ஒருநாள் போட்டியையாவது வென்று இந்தியா தொடரை சமன்செய்யுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 249 ரன்கள் எளிய இலக்கு என்றாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகும் சொதப்பலாக இருப்பதுதான் சிக்கலாக உள்ளது. ஸ்ரேயாஸ், ரிஷப், துபே போன்றவர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும்.