
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 19 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய பவுலராக மாறியுள்ளார் ஷமி. இந்த பட்டியலில் 1983-ல் கபில்தேவ் 5/43, 2004-ல் அஜித் அகர்கர் 6/42 என முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனர்.
மேலும் 2007ஆம் ஆண்டு ஜாகீர் கானுக்கு பிறகு, 16 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் மாறி அசத்தியுள்ளார். ஆனால் என்னதான் பல அடுத்தடுத்த சாதனைகளை படைத்திருந்தாலும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 3-வது பவுலராகவே ஷமி பார்க்கப்படுகிறார். ஒடிஐ தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் முகமது சிராஜ், ஷமியின் லீடிங் பவுலர் இடத்தை பிடித்துள்ளார். நடப்பு ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகான உலகக்கோப்பையில் இந்திய அணி பும்ரா மற்றும் சிராஜை மட்டுமே வைத்து விளையாடும் எனவும், தேவைப்படும் நேரத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடினால் மட்டுமே ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அற்புதமான பவுலிங் ஸ்பெல்லுக்கு பிறகு பேசியிருக்கும் ஷமி, “6-7 மாதங்களாக இடைவிடாத கிரிக்கெட் விளையாடியதால் WTC இறுதிப் போட்டிக்குப் பிறகு இடைவேளை அவசியமாக இருந்தது. என் உடலுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று உணர்ந்தேன். பின்னர் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் விவாதித்து ஓய்வெடுக்க முடிவு செய்தோம். ஆனால் எனது ஓய்வு ஓய்வாக இருக்கவில்லை, வீட்டிலேயே நான் அதிகமாக பயிற்சி செய்தேன். இந்திய அணியில் இருந்ததை விட எனது வீட்டில் இருக்கும் செட்-அப்பில்தான் நான் அதிகமாக பயிற்சி செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய அணியில் லீடிங் பவுலராக இல்லாதது குறித்து பேசியிருக்கும் ஷமி, “போட்டியின் நிபந்தனைகளுக்கு ஏற்ப வீரர்களை சுழற்றுவதில் பயிற்சியாளருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அது எந்த அணியை எதிர்த்து விளையாடுகிறோம் என்பதையும் சார்ந்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பான முடிவுகளை கண்டுவருகிறோம். நீங்களும் பார்த்துவருகிறீர்கள், அதனால் திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளார்.