திரும்பிவந்துட்டனு சொல்லு! வேகத்தில் மிரட்டிய முகமது ஷமி! ஒரே போட்டியில் 4 சாதனைகள் படைத்து அசத்தல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி இமாச்சல் பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
முகமது ஷமி
முகமது ஷமிTwitter

2023 உலகக்கோப்பை தொடர் தொடங்கி 20 போட்டிகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் 4 போட்டிகள் வீதம் மோதிவிட்டனர். இந்நிலையில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளன. தோல்வியே சந்திக்காத இவ்விரு அணிகளும் இன்று தர்மசாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

20 வருடமாக நீடித்துவரும் இந்தியா-நியூசிலாந்து ரைவல்ரி!

ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரையில் இவ்விரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5 முறை வெற்றிபெற்றுள்ள நியூசிலாந்து அணி 5-3 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2003 உலகக்கோப்பை போட்டியில் மட்டும் தான் கடைசியாக இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.

IND vs NZ - 2019 Semi Final
IND vs NZ - 2019 Semi FinalTwitter

அதற்கு பிறகான 2007, 2011, 2015, 2019 என 4 உலகக்கோப்பைகளிலும் நியூசிலாந்து அணியே இந்தியாவை வீழ்த்தியுள்ளது. 20 வருடமாக நீடித்துவரும் இந்த ரெக்கார்டை இன்று உடைக்கும் முனைப்பில் இந்தியா களம்கண்டுள்ளது.

48 வருடங்கள் கழித்து சதமடித்த டேரில் மிட்செல்!

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டெவான் கான்வேவை 0 ரன்னில் சிராஜ் வெளியேற்ற, வில் யங்கை 17 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் முகமது ஷமி. இந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியில் விளையாடும் முகமது ஷமி, வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதற்கு பிறகு கைக்கோர்த்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் நியூசிலாந்து பேட்டர்கள் மீது அழுத்தம் போட்டாலும், கைக்கு வந்த 3 கேட்ச்களை கோட்டைவிட்ட ஃபீல்டர்கள் கிடைத்த வாய்ப்பை எல்லாம் தவறவிட்டனர். வாய்ப்பை பயன்படுத்திகொண்ட ரச்சின் மற்றும் மிட்செல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர்.

Mitchell
Mitchell

அடுத்தடுத்து அரைசதம் அடித்த இந்த வீரர்கள் 3வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். இந்தியா விக்கெட்டை தேடும்போது மீண்டும் பந்துவீச வந்த முகமது ஷமி, 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 75 ரன்களில் இருந்த ரச்சினை வெளியேற்றி அசத்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் இந்திய அணிக்கு எதிராக சதமடித்து அசத்தினார். 1975 உலகக்கோப்பையில் சதமடித்த க்ளென் டர்னருக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரராக மாறினார் டேரில் மிட்செல்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி!

சதத்தை கடந்து அபாரமாக விளையாடிய மிட்செல்லை 130 ரன்களில் வெளியேற்றி ஷமி, நியூசிலாந்தை 300 ரன்கள் கடக்காமல் பார்த்துக்கொண்டார். தொடர்ந்து களத்திற்கு வந்த ஷான்ட்னர் மற்றும் ஹென்றி இருவரையும் போல்டாக்கி வெளியேற்றிய ஷமி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பவுலராகவும் மாறினார்.

Shami
Shami

குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த, 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 273 ரன்கள் சேர்த்தது.

ஒரே போட்டியில் 4 சாதனைகள் படைத்த முகமது ஷமி!

தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட முகமது ஷமி, கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய பவுலராக இருந்துவந்த ஷமி, இந்த உலகக்கோப்பையில் 3வது பவுலராக இருந்துவருகிறார். இந்நிலையில் இன்றைய ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார் ஷமி.

Shami
Shami

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை: 48 வருட உலகக் கோப்பையில் குறைவான இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. 12 உலகக்கோப்பை இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் ஷமி, 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதிகமுறை 5 விக்கெட்டுகள்: நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, உலகக்கோப்பையில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலராக மாறினார். கடந்த 2019 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஷமி. இந்த பட்டியலில் கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங் முதலிய இந்திய பவுலர்கள் அனைவரும் ஒருமுறை மட்டுமே 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Shami
Shami

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்: ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளியுள்ளார் ஷமி. 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், ஜகீர் கான் ( 44 விக்கெட்டுகள்), ஜவகல் ஸ்ரீநாத் ( 44 விக்கெட்டுகள்) இரண்டு வீரர்களுக்கு அடுத்த இடத்தில் நீடிக்கிறார்.

அதிகமுறை 4 விக்கெட்டுகள்: குறைவான உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்தாலும் 4 விக்கெட்டுகளை அதிகமுறை கைப்பற்றிய வீரராக ஷமி மாறியுள்ளார். இந்த பட்டியலில் 5 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி, மூன்றாவது உலக பந்துவீச்சாளராக முத்திரை பதித்துள்ளார். இந்த பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் 6 முறையும், இம்ரான் தாஹிர் 5 முறையும் வீழ்த்தி முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com