
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 05ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருந்துவருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை அணித்தேர்வாளர் அஜித் அகர்கர் இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.
இந்திய அணியின் இந்த அறிவிப்பில் சமீபமாக பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய வீரர்களுக்கு பதிலாக, பல மாதங்களாக ஓய்வில் இருந்த வீரர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசைக்கான தேடுதல் வேட்டை என்பது சமீபகால இந்திய அணியின் முக்கியமான விசயமாக பார்க்கப்பட்டது. அதற்கான இடத்தில் பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டாலும் நிர்வாகம் எதிர்பார்த்த ஆட்டத்தை எந்த பரிசோதனை வீரர்களும் வெளிப்படுத்தவில்லை. அந்த பரிசோதனை சுழற்சியில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் பயன்படுத்தப்பட்டாலும் போதுமான ஆட்டத்தை இருவருமே வெளிப்படுத்தவே இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கூட இந்திய மிடில் ஆர்டர் பேட்டர்கள் சோபிக்கவில்லை, மாறாக டி20 தொடரில் மட்டும் திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் ஆசியக்கோப்பை தொடரிலும் இடம்பெற்று அசத்தினார்.
இந்நிலையில், சஞ்சு அல்லது சூர்யகுமார் இருவருக்கும் முன்னதாக திலக் வர்மாவிற்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இல்லையேல் ஒருநாள் போட்டி சராசரிகளை கருத்தில் கொண்டு சூர்யாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனே இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்ற எண்ணம் இந்திய ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன் 13 போட்டிகளில் 55.71 சராசரியுடனும், சூர்யகுமார் யாதவ் 26 போட்டிகளில் 24.33 சராசரியுடனும் இருக்கின்றனர். இரண்டு பேரின் ஆட்டத்தை வைத்து பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டு சஞ்சு சாம்சன் தவிர்க்கப்பட்டுள்ளார். மேலும் பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாத கே எல் ராகுல் அப்படியே உலகக்கோப்பை அணிக்குள் எடுத்துவரப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் உலகக்கோப்பை ஸ்குவாடை பார்த்த இந்திய ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், “சஞ்சு சாம்சன் நீங்கள் தவறான காலத்தில் பிறந்து விட்டீர்கள், சஞ்சுவிற்கு நீதி வேண்டும், இந்த தேர்வு முழுக்க முழுக்க சொந்த விருப்பம் மற்றும் அரசியல் கலந்தது” என்று அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் உலக்கோப்பை 15 வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.