பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட வங்கதேச அணி, பாகிஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றது.
இதற்கு முந்தைய 12 சந்திப்பில் ஒருமுறை கூட பாகிஸ்தானை தோற்கடிக்காத வங்கதேச அணி, அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தி முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.
இந்த வெற்றி வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய போற்றும் விதமாக பார்க்கப்படும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பாகிஸ்தானுக்கு எதிரான மறக்கமுடியாத டெஸ்ட் தொடரை வென்ற பிறகு கோப்பையுடன் தூங்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக பெறவே முடியாத வெற்றி அல்லது சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் வெற்றியாக பார்க்கப்படும் உலகக்கோப்பை போன்ற டிரோபிகளை வெல்லும் கேப்டன்கள், அந்த கோப்பையுடன் உறங்கும் புகைப்படத்தை பார்த்திருக்கிறோம்.
இதை முதலில் ஆரம்பித்து வைத்தது மெஸ்ஸி தான், கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2022-ல் பிரான்சுக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி பெனால்டிசூட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
36 வருடங்களுக்கு பிறகு எந்த காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வெற்றிக்கு அழைத்துச்சென்ற லியோனல் மெஸ்ஸி, உலகக்கோப்பை வென்றதற்குபிறகு அதனை கட்டிப்பிடித்து உறங்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதையும் படிக்க: `அவ்ளோ ஆசை... உலகக்கோப்பை மேல!’- கோப்பையை கட்டிப்பிடித்தவாறே உறங்கும் மெஸ்ஸி
அதனைத்தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வென்றபிறகு, உலகக்கோப்பையுடன் உறங்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ரோகித்தை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் உலகக்கோப்பையுடன் உறங்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றியை பதிவுசெய்த வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கோப்பையுடன் உறங்கும் புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் ’குட் மார்னிங்’ என்ற டேக்குடன் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சில ரசிகர்கள் ‘சகோதரரே இது ஒன்றும் உலகக்கோப்பை இல்லை, எழுந்து உலகக்கோப்பை வெல்வதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்’ என்று கலாய்த்தாலும், வரலாற்று வெற்றியை பெற்ற சாண்டோவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.