WTC Final: 'அவர் அதுக்கு சரிப்பட மாட்டார்; ரோகித் உடன் இவரை களமிறக்குங்க' - மைக்கேல் வாகன் கருத்து

'சுப்மன் கில்லை விட கே.எல். ராகுல் ஸ்விங் பந்துகளை சிறப்பாக விளையாடுவார்' என்கிறார் மைக்கேல் வாகன்.
Rohit sharma
Rohit sharmaFile Image

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் தான் விளையாட வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், ''வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். இங்கிலாந்து கால சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இந்திய அணியில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரே மாற்றம் என்னவெனில், சுப்மன் கில்லை விட கே.எல்.ராகுல் ஸ்விங் பந்துகளை சிறப்பாக விளையாடுவார். பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன். குறிப்பாக பந்து ஸ்விங் ஆகும்போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார்.

எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில், நான் இந்திய அணியின் தேர்வுக் குழுவில் இல்லை. ஆனால் இறுதிப்போட்டிக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிப் போட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணி வருமாறு:- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com