Published : 25,Jul 2017 11:28 AM
இந்திய மக்களால் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி சுஷ்மா: அமெரிக்க நாளிதழ் புகழாரம்

இந்தியாவில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி சுஷ்மா சுவராஜ் என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் புகழாராம் சூட்டியுள்ளது.
இதுதொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் சுஷ்மா, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனில் செலுத்தும் அக்கறை காரணமாக பாராட்டுகளைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் வரும் புகார்கள் மீது உடனடியாக சுஷ்மா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த கட்டுரையில் பாராட்டப்பட்டுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தத்தளித்த இந்தியர்களை மீட்ட சுஷ்மா, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது சரியான சமயத்தில் உதவிக்கரம் நீட்டி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகம் பேரால் ட்விட்டரில் பின்தொடரப்படும் அரசியல்வாதிகளில் டாப் டென் பட்டியலிலும் சுஷ்மா சுவராஜ் இடம்பெற்றுள்ளார். சுமார் 8.69 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிநாடுகளில் வாழும் தனது நாட்டுக் குடிமக்களுக்கு உதவ வேண்டும் என்ற பழமையான விதியினை மக்களுக்கு சுஷ்மா சுவராஜ், தனது நடவடிக்கைகள் மூலம் நினைவுபடுத்தி வருவதாகவும் அந்த கட்டுரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான அந்தக் கட்டுரையை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஹோவர் நிறுவனத்தில் ஆய்வு மாணவரான டுங்கு வரதராஜன் என்பவர் எழுதியுள்ளார்.