Published : 20,Apr 2021 05:14 PM

மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?

Mamata-blamed-PM-Modi-for-the-rise-in-infections-across-India-and-Bengal


மேற்கு வங்கத் தேர்தலில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அதையே தேர்தல் களத்தில் பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக முதல்வர் மம்தா பானர்ஜி பயன்படுத்தி வருவதாகவும் ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது. இதன் பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நாட்டின் பிற பகுதிகளைப் போலவே, மேற்கு வங்கத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு விரைவாக அதிகரித்து வருகிறது. முதல் அலைகளை விட மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இரண்டாவது அலை, அங்கு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் வந்துள்ளதால் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே நாளில் அனைத்து இடங்களுக்கும் தேர்தல் இல்லாமல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஐந்து கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், எஞ்சிய மூன்று கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக மாற்றும் முயற்சியில் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார்.

"மேற்கு வங்கம் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நோய் அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் பொறுப்பற்ற அணுகுமுறையே காரணம். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது" என்று சமீப காலமாக கடுமையாக மத்திய அரசை சாடி வருகிறார் மம்தா. இன்னும் நடைபெறவுள்ள மூன்று கட்ட தேர்தலில் பாஜக ஆதிக்கம் இருக்கும் பகுதிகளே அதிகம். இதனால் இதுபோன்ற விமர்சனங்கள் இந்த இடங்களில் பாஜகவை பின்னுக்கு தள்ள உதவும் என்ற கணக்கு போடுகிறார் மம்தா. இதனால்தான் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், பாஜக தரப்பில் அதற்கு கடும் மறுப்புகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், மோடி மற்றும் பாஜக தரப்பில், "மம்தா உண்மையிலேயே கொரோனா குறித்து கவலைப்படுகிறார் என்றால், ஏன் பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மக்கள் குறித்து கவலைப்படுபவர் என்றால் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை சொல்லியிருக்கலாம் அல்லவா?" என்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.

பாஜக விதிமுறைகளை மீறுகிறதா?

மம்தாவோ மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தை கொரோனா அதிகரிப்பின் காரணமாக மேற்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருப்பதோடு, "மோடி பல பேரணிகளில் உரையாற்றி வருகிறார், இவை அனைத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற பாஜக தயாராக இல்லை" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிறார். ஆனால் இதற்கு, "மம்தாவும் அதைத்தான் செய்கிறார்" என பாஜக பதிலடி கொடுக்கிறது.

'வெளியாட்கள்' மூலம் நோய்த்தொற்று பரவுகிறதா?

இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, பாஜக ஒரு பெரிய பிரசார இயக்கத்தையே மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தலைமையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்கள் பல வாரங்களாக மேற்கு வங்கத்தின் தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக கடந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

image

இப்படி வரும் வெளியாட்கள் முறையான சோதனைகள் இன்றி மேற்கு வங்கத்தில் நுழைகிறார்கள்; தொடர்ந்து பயணம் செய்கிறார்கள்; மக்களுடன் கலக்கிறார்கள்; இதனால் வைரஸ் பரவுவதற்கு உதவுகிறது என்று திரிணாமூல் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், மற்ற மாநிலங்களில் இருந்து வரும் இதுபோன்ற வெளியாட்களின் வருகையை தடை செய்யப்பட வேண்டும் என்று ஆளும் திரிணாமூல் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய மம்தா, "இதுபோன்ற வெளியாட்கள் பிரசாரம் என்கிற போர்வையில் மேற்கு வங்கத்தில் வந்து கொரோனவை பரப்பிவிட்டு செல்கிறார்கள். கடந்த ஆண்டு, எங்கள் மாநிலத்தில் கொரோனா நிலைமை மோசமாக மோசமாக இருந்தபோது, இந்த பாஜக தலைவர்கள் யாரும் மேற்கு வங்கம் வருவதற்கு அக்கறை காட்டவில்லை" என்று வறுத்தெடுத்தார்.

இதேபோல் தடுப்பூசியும் அப்படிதான் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. "கொரோனா தடுப்பூசிகளை விரைவாக வழங்குமாறு மத்திய அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும், பிரதமர் மோடி அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இது மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது" என்று தடுப்பூசிகள் குறித்து மம்தா அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

image

ஆனால், மம்தா எல்லாவற்றையும் அரசியல் மயமாக்குவதை மம்தா நிறுத்த வேண்டும். எந்த மாநிலங்களும் புகார் கொடுக்கவில்லை. மம்தா மட்டுமே அதைப் பற்றி புகார் செய்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக தடுப்பூசி போடுவதை அரசியல்மயமாக்க அவர் முயற்சிக்கிறார்" என்கிறார் மேற்கு வங்க பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா.

கொரோனா நிவாரண நிதியிலும் இதேபோன்று குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் மம்தா. "கொரோனா அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட நான் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மாறாக, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிவாரண நிதியை அதிகளவு கொடுக்கின்றனர். ஆனால் பாஜகவோ, மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகளை சொல்கிறது. தனது அரசாங்கம் அனைத்து கொள்முதல்களையும் வெளிப்படையான முறையில் செய்து வருகிறது. என்னை குற்றம்சாட்டும் அவர்கள், முதலில் பி.எம் கேர்ஸ் நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் அதன் பயன்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று விமர்சித்துள்ளார்.

இப்படி, கொரோனா விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் பாஜகவுக்கு எதிராக திருப்பி வருகிறார். இது மேற்கு வங்க மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

- உறுதுணைக் கட்டுரை: India Today

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்