[X] Close

கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை

சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

How-India-failed-to-prevent-a-deadly-corona-second-wave--Explained

கொரோனா இரண்டாம் அலை தொடர்பாக சில மாதங்கள் முன்பே நிபுணர்கள் எச்சரித்ததைக் கண்டுகொள்ளாததால், இந்தியாவில் தற்போது பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வருவதாக ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது.

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியா கொரோனா தொற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அறிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் அவர் பாராட்டினார். இதே காலகட்டத்தில் இந்தியா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பத் தொடங்கியது.

ஹர்ஷவர்தனின் மேற்கூறிய கூற்று, கொரோனா தாக்கம் குறைந்ததன் காரணமாக முன்வைக்கப்பட்டது. செப்டம்பர் நடுப்பகுதியில் சராசரியாக ஒரு நாளைக்கு 93,000-க்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து பிப்ரவரி நடுப்பகுதியில், ஒரு நாளைக்கு சராசரியாக 11,000-க்கும் குறைவாக இருந்தது. தினசரி இறப்புகள் சராசரி 100-க்கும் குறைவாக மாறியது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இந்தியாவில் கொரோனா குறையத் தொடங்கியதாக பேசப்பட்டது. பிரதமர் மோடியை "தடுப்பூசி குரு" என்றும் பாராட்டத் தொடங்கினர். பிப்ரவரி மாத இறுதியில், இந்தியத் தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை அறிவித்தது. இந்தத் தேர்தல் சற்று மிகப்பெரிய விஷயம். ஏனென்றால், 18.6 கோடி மக்களால் 824 தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. இதனால், மார்ச் 27 முதல் தேர்தல்கள் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கால அட்டவணையை வெளியிட்டிருந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


Advertisement

இந்தத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளும், தனி மனித இடைவெளிகளும் இல்லாமலும் பிரசாரங்கள் முழுவீச்சில் நடக்கத் தொடங்கின. இது ஒருபுறம் இருக்க, தேர்தல்கள் நடக்காத மாநிலமான குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் நடுப்பகுதியில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் காண 130,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களை கிரிக்கெட் வாரியம் அனுமதித்தது. பெரும்பாலும் மாஸ்க் போன்ற பாதுகாப்புகள் இல்லாமல் ரசிகர்கள் குவிந்தனர். போதாக்குறைக்கு தேர்தல் பேரணிகள், கும்பமேளா போன்ற மத நிகழ்ச்சிகள் பாதிப்பை உச்சம் அடைய வைத்தன.

இதுபோன்ற சம்பவங்கள் ஒரே மாதத்தில் கொரோனா கள நிலவரத்தை மாற்றியமைத்தன. பேரழிவு தரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. பெரும்பாலான நகரங்களில் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. மீண்டும் ஒருநாளைக்கு 1,00,000 என்கிற அளவில் பாதிப்புகள் வரத் தொடங்கின. அதிலும் உச்சபட்சமாக இன்று (ஏப்.19) நாடு முழுவதும் 2,73,810 தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது; கடந்த 24 மணி நேரங்களில் 1,619 உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளே, இந்தியா இப்போது ஒரு பொது சுகாதார அவசரநிலையின் பிடியில் உள்ளதை உணர்த்துகிறது. மயானங்களில் இறுதிச்சடங்குகளை செய்ய வரிசை, நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸின் நீண்ட வரிசைகள், மருத்துவமனைகளில் நோயாளிகளின் ஒரு படுக்கையில் இரண்டு மூன்று பேர் அமர்ந்திருப்பது என பல மாநிலங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை வந்துள்ளது. மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.


Advertisement

இதைவிட முக்கியமானது, தடுப்பூசி பற்றாக்குறை. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையிலும், தடுப்பூசி பற்றாக்குறை புகார்கள் வந்துள்ளன. தற்போதைய நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக உள்ளது. எனினும், இந்த நிறுவனம் ஜூன் மாதத்திற்கு முன் அதிகளவு தடுப்பூசிகளை தயாரிக்க முடியாது என சொல்லியிருக்கிறது. காரணம், நிதிப் பற்றாக்குறை. தடுப்பூசி தயாரிப்புத் திறனை விரிவுபடுத்துவதற்கு போதுமான பணம் இல்லை என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

எனினும், முன்னெச்சரிக்கையாக சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதேநேரத்தில், வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்ய ஆக்ஸிஜன் கூட இப்போது இறக்குமதி செய்யப்படலாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் நோய்த் தொற்றுகள் குறைந்து வந்ததால், குறைவான மக்கள் மட்டுமே தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். இதனால் தடுப்பூசி இயக்கமும் மெதுவாகின. இந்தியாவின் தடுப்பூசி இயக்கமானது ஜூலை இறுதிக்குள் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், அது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிப்ரவரி நடுப்பகுதியில், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரமார் முகர்ஜி, "கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது இந்தியா தடுப்பூசி இயக்கத்தை துரிதப்படுத்த வேண்டும்" என்று ட்வீட் செய்தார். ஆனால், அதை யாரும் கவனிக்கவில்லை.

இதுபோன்று மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைப்பதன் மூலமும், திருமணங்கள் மற்றும் சமூகக் கூட்டங்களில் கலந்துகொள்வதாலும், அரசியல் பேரணிகளையும் மதக் கூட்டங்களையும் அனுமதிப்பதன் மூலமும் இந்தியாவின் இரண்டாவது அலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், முதல் அலையில் இல்லாத அளவுக்கு பெரும்பாலும் கிராமப்புற மக்களும், இளம் வயதினரும் 2-ம் அலை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா 2-ம் அலை குறித்து ஏற்கெனவே எச்சரித்தகாக கூறுகிறார்கள் நிபுணர்கள். "எப்படி மீண்டும் அதிவேகமாக பரவத் தொடங்கியது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாவதுதான் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க புதிதான ஒரு போக்கு மாதிரியே இருக்கிறது" என்கிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பொது மருத்துவர் ஷியாம் சுந்தர் நிகாம்.

"அதிகாரிகளின் அடாவடிப் போக்கு, அதீத தேசியவாதம், ஜனரஞ்சக நிலைப்பாடு, அரசு செயல்பாடுகளின் போதாமை முதலிய இந்தியாவுக்கே உரித்தான காரணிகளால் கொரோனா பேரிடர் மேலும் அதிகரித்துவிட்டது" என்கிறார் மிஹிர் சர்மா என்னும் கட்டுரையாளர்.

'பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா'வின் தலைவர் பி.ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில், "ஹெர்டு ஹிம்யூனிட்டியை நாம் பெற்றுவிட்டோம் என்று நம்மில் சிலரும் கருதினோம். இதனால் எல்லோரும் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பினர். அதேநேரத்தில், சில எச்சரிக்கையான குரல்களுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டோம்" என்கிறார். அதேபோல், "இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா அதை நிச்சயம் தள்ளி வைத்திருக்க முடியும் அல்லது தீவிரத்தைக் குறைத்திருக்க முடியும்" என்கிறார் பேராசிரியர் கெளதம் மேனன்.

மருத்துவ நிபுணர்கள் பலரும் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், மக்களும் தனி மனித இடைவெளியுடன் வாழ்வது, எப்போது முகக் கவசத்தை அணிவது, வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையைத் தொடர்வது முதலான தற்காப்பு முறைகளை அக்கறையுடன் பின்பற்றியிருந்தால், இந்த அளவுக்கு மோசமான ஓர் இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் சூழலைத் தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

"நம்மால் மனித வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவைக்க முடியாது. நெரிசல்மிகு நகரத்தில் நம்மால் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற முடியாமல் போனாலும் கூட, குறைந்தபட்சமாக முகக்கவசத்தையாவது அணிந்து கொண்டிருக்கலாம். அதுவும் முகக்கவசத்தை நேர்த்தியாக அணியலாம். இது ஒன்றும் மிகப் பெரிய விஷயம் இல்லையே" என்று ஆதங்கப்படுகிறார் மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி.


இப்படி நிபுணர்கள் அனைவரும் ஒரே குரலாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தி லான்செட் கோவிட் -19 ஆணையத்தின் அறிக்கை எச்சரிக்கையின்படி, கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படாவிட்டால், ஜூன் முதல் வாரத்தில் இந்தியா ஒவ்வொரு நாளும் 2,300 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

- உறுதுணைக் கட்டுரை: BBC.com


Advertisement

Advertisement
[X] Close