Published : 19,Apr 2021 06:20 PM

"என் படங்களின் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை!"- நடிகர் ஃபஹத் ஃபாசில்

Not-worried-if-my-films-work-or-not-says-Fahadh-Faasil

"எப்போதும் எனது திரைப்படங்கள் வெற்றி பெறுவது பற்றியோ, தோல்வியைத் தழுவது குறித்தோ நான் கவலைப்படுவது இல்லை" என்றார் நடிகர் ஃபஹத் ஃபாசில்.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ஷியாம் புஷ்கரன், திலீஷ் போதன் கூட்டணியில் ஏப்ரல் 7 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் 'ஜோஜி'. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படம் தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள நடிகர் ஃபஹத் ஃபாசில், "ஜோஜி படத்தின் வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு நேர்ந்த விபத்து காரணமாக ஓய்வு எடுக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் இந்த வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், எப்போதும் எனது திரைப்படங்கள் வெற்றி பெறுவது பற்றியோ அல்லது தோல்வியைத் தழுவுவது குறித்தோ நான் கவலைப்படுவது இல்லை. ஏனென்றால், படங்கள் தோல்வி அடைந்தால் வேதனையை தரும். என்னைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை அடையாளம் கண்டு, அதில் பணியாற்றுவது உற்சாகமான செயல். உங்களுக்கு ஒரு ஐடியா அல்லது கதை பிடித்திருக்கிறது. அதைப் படமாக்க, படப்பிடிப்பிற்கு செல்கிறீர்கள். அதில் உங்கள் மேம்பட்ட உழைப்பை கொடுத்து அந்தப் படத்தை முடிக்கிறீர்கள்.

இதில் நீங்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட விஷயத்திற்கு, கருத்துக்கு நியாயம் செய்திருக்கிறீர்களா என்பதுதான் உங்களது கவனமாக இருக்க வேண்டும். அது கடைசி வரைக்கும் தொடர வேண்டும்.

உங்கள் படம் வெற்றி பெற்றிருந்தால்கூட, நீங்கள் அதில் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன; நீங்கள் தவறவிட்ட பல விஷயங்கள் உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், இது மாதிரியான செயல்முறை ஒருபோதும் முழுமையடையாது. அதனால்தான் வெற்றி - தோல்வி பற்றி கவலைகொள்வது கிடையாது. எனது வேலையின் அம்சத்தை நான் விரும்புகிறேன்; என்னால் முடிந்தவரை இதைச் செய்ய விரும்புகிறேன். நான் எப்போதும் வேலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது பற்றி சிந்திப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த 'ஜோஜி', 'இருள்' என இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஓடிடியில்தான் ரிலீசாகின. இது கேரள திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ஃபஹத் தான் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படமான 'மாலிக்' படம் நிச்சயம் தியேட்டரில் வெளியாகும் என்று தற்போது அறிவித்திருக்கிறார். இது அதிருப்தி தியேட்டர் அதிபர்கள் மத்தியில் சலசலப்பை சற்றே குறைத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்