Published : 24,Jul 2017 02:32 PM
நீட் தேர்வு விவகாரம்: ராஜ்நாத் சிங் கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 6 தமிழக அமைச்சர்களைக் கொண்ட குழுவினர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் இல்லத்தில் சந்தித்து நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாதாடிக் கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரினோம். எங்கள் கோரிக்கையை அவர் கனிவுடன் பரிசீலிப்பதாகவும், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார் எனத் தெரிவித்தார். அதேபோல், தமிழக மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னதாக, தமிழக அமைச்சர்கள் குழுவினர் முதலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அவரும் தமிழக குழுவினருடன் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்.