பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க சீனிவாசனுக்குத் தடை

பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க சீனிவாசனுக்குத் தடை
பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க சீனிவாசனுக்குத் தடை

மும்பையில் ஜூலை 26ல் நடைபெறும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சீனிவாசன் மற்றும் நிரஞ்சன்ஷா ஆகியோருக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பிசிசிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசனுக்கு ஆதரவாக வாதாடினார். மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகளாகப் பங்கேற்கும் சீனிவாசன் போன்றோரை லோதா கமிட்டி தடை செய்யமுடியாது என்று பிசிசிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பிசிசிஐ-யின் கடந்த 4 பொதுக்குழுக் கூட்டங்களிலும் சீனிவாசன் பங்கேற்றபோது யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீனிவாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்பியுமான கபில் சிபல், சீனிவாசன் போன்ற பிரதிநிதிகளை லோதா கமிட்டியால் தடை செய்யமுடியாது என்றும் இந்த விவகாரத்தில் சீனிவாசன் குறிவைக்கப்படுவதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வரும் 26ல் நடைபெறும் பிசிசிஐ பொதுக்கூட்டத்தில் சீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் பங்கேற்கக் கூடாது என்றும் தடையை மீறி பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

அதேபோல, தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆகஸ்ட் 18ல் விசாரிக்கப்படும் என்று கூறி, அன்றைய தினத்துக்கே வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. லோதா குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 70 வயதைத் கடந்த என்.சீனிவாசனும், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ஷா-வும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் கடந்த மாதம் நடந்த கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவர்கள் இருவரும், மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் என்ற பெயரில் கலந்து கொண்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் எப்படி பங்கேற்றனர் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com