
பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்றதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்த 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஹுரியாத் அமைப்பைச் சேர்ந்த கிலானியின் மருமகன் அல்தாஃப் ஷா உள்ளிட்டோர் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அமைதியை சீர்குலைக்க ஹுரியாத் அமைப்பைச் சேர்ந்த ஷாகித் உல் இஸ்லாம் பாகிஸ்தானிடமிருந்து நிதியுதவி பெற்றதாக கடந்த மே மாதம் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து ஹுரியத் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இஸ்லாம் நீக்கப்பட்டார். அவர், பிரிவினைவாத இயக்கத் தலைவரான மிர்வாஸ் உமர் பாரூக்கிற்கு நெருக்கமாக இருந்தவர் ஆவார். மேலும், இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹபீஸ் சையத் தலைமையில் செயல்படும் தடை செய்யப்பட்ட லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத இயக்கம், ஹுரியாத் மாநாட்டு அமைப்பு, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்ளிட்ட அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அமைதியான சூழலைக் குலைக்க பயங்கரவாதிகளிடமிருந்து நிதியுதவி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது சில கடிதங்கள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான பணம் உள்ளிட்டவைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தியது அதுவே முதல்முறையாகும்.