
மதுரையில் கல்விக்கடன் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து பணத்தை இழந்ததாக கூறப்படும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுத்தெருவை சேர்ந்த காசிராஜன் என்பவரது மகள் தாரணி. கடந்த 2019 ஆம் ஆண்டு 12 ஆம் தேர்ச்சி பெற்ற இவர் கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலங்களில் தனியார் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், தாரணி தனியார் அழகு நிலைய கல்வி நிறுவனத்தில் தங்கி படிப்பதற்கு விண்ணப்பித்து அதற்கான கல்விக்கட்டணத்தை பெற்றோரிடம் கேட்டு உள்ளார். அதனைத்தொடர்ந்து கல்விநிர்வாகத்தை தொடர்பு கொண்ட தாரணியின் குடும்பத்தினர் தங்களின் பொருளாதார நிலையை நிர்வாகத்திடம் கூற, அவர்கள் கல்விகடன் பெறுவதற்கான சில தொடர்பு எண்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் நிதிநிறுவனத்தை தொடர்பு கொண்ட மாணவி, கல்விகட்டணத்திற்கான ஆவணக்கட்டனமாக 1 லட்சத்திற்கும் மேலாக செலுத்தியதாக சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் இறுதியாக 23 ஆயிரம் ரூபாயை பெற்றோரிடம் இருந்து பெற்ற மாணவி, அந்த நிறுவனத்திற்கு ஆன்லைன் வழியாக பணத்தை அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.
அதனைத்தொடர்ந்து தாரணியின் தாய் கடைக்கு சென்ற நிலையில் தாரணி வீட்டில் சேலையை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தாரணியின் குடும்பத்தினர் தெப்பக்குளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் மாணவியின் செல்போனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.