
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ராணுவ வீரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பேஹாரா நகரம், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் அக்கூன். பிராந்திய ராணுவ வீரரான சலீம் தனது மனைவி, 9 வயது மகள், 6 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சலீம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இரண்டு பயங்கரவாதிகள் சலீமை சுட்டுவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “சலீம் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி) அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இரண்டு பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். தொடர்ந்து சலீம் துணை மாவட்ட மருத்துவமனைக்கு பிஜ்பெஹாராவுக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு இருந்து ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பப்பட்டார். இருப்பினும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.” என்றனர்.