Published : 08,Apr 2021 10:32 PM
“23121 பேரிடம் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை!” - வடகொரியா

வட கொரியாவில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தங்கள் நாட்டில் 23121 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு கூட நோய் தொற்று பாதிப்பு இல்லை என வட கொரியா உலக சுகாதார மையத்திடம் தெரிவித்துள்ளது.
இதனை உலக சுகாதார மையம் மின்னஞ்சல் மூலம் Associated Press பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் இதனை வட கொரியா தெரிவித்துள்ளது. சீனாவின் எல்லையை பகிரும் வட கொரியாவில் ஒரே ஒரு கொரோனா வழக்கு கூட இல்லாதது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஏனெனில் பெரும்பாலான தேவைகளுக்கு வட கொரியா சீனாவை சார்ந்துள்ளது.
எல்லையை முடக்குவது, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பது என பல்வேறு நடைமுறைகளை வட கொரியா பின்பற்றி வருகிறது. அதே போல டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் வட கொரியா பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது.