Published : 24,Jul 2017 02:14 AM
மகளிர் கிரிக்கெட் அணிக்கு மோடி வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை நழுவவிட்டாலும் ஒட்டுமொத்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து போராடி இந்திய அணி தோல்வியடைந்தது. கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்தது அனைவருக்கும் ஏமாற்றாத்தை அளித்தது. தோல்வியடைந்த போதும் இந்திய அணியினரை உற்சாகப்படுத்தும் விதமாக வாழ்த்துகளும் பாராட்டுக்களும் குவிந்துவருகின்றன. பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்துப் போராடிய இந்திய அணி வீராங்கனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். மகளிர் அணி தங்களது சிறந்த பங்களிப்பை, திறமையை ஒட்டுமொத்த உலகக்கோப்பை போட்டியிலும் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்று பாராட்டி உள்ளார்.
மகளிர் கிரிக்கெட் அணியினரின் போராட்ட குணத்தை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், இந்திய மகளிர் அணியினர் நாடு திரும்பும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்திய மகளிர் அணியினர் சர்வதேச அளவில் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். வீரேந்திர சேவாக், அதிர்ஷ்டமில்லாமல் போனாலும், அவர்களது முயற்சிக்கு தலை வணங்குவதாகவும், இந்தியாவில் உண்மையிலேயே பெண்கள் கிரிக்கெட் எழுச்சியடைந்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.