
”திமுக ஆட்சியில் பெண்கள் நிம்மதியாக வாழமுடியாது” - எடப்பாடியில் தனது இறுதிக்கட்ட பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில், சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று 3 இடங்களில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் மட்டும் பரப்புரை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலை 5 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், எடப்பாடியில் மாலை 4 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
பலத்த காற்றுடன் மழையின் வேகமும் அதிகரித்தது. இதனால் பரப்புரையை காண்பதற்காக கூடியிருந்த மக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். காவல்துறையினரும் நிழல் குடையை பிடித்தபடி காத்திருந்தனர். சுமார் ஒருமணி நேரம் வரை நீடித்த மழை காரணமாக முதலமைச்சரின் பரப்புரையில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர், 6 மணியளவில் தனது இறுதிக்கட்ட பரப்புரையில் பேசிய முதல்வர் பழனிசாமி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். தன்னுடைய தாய் குறித்து பேசியதை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவேயில்லை என்று முதல்வர் கூறினார்.