Published : 03,Apr 2021 04:38 PM
டீஹைட்ரேஷனால் தவித்த தொண்டருக்கு தனது மருத்துவக் குழுவை அனுப்பிய பிரதமர் மோடி!

அசாமில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, டீஹைட்ரேஷன் பிரச்னையால் தவித்த தொண்டருக்கு தனது மருத்துவக்குழுவை அனுப்பி வைத்தார்.
அசாம் தமுல்பூரில் இன்று நடந்த பொதுக்கூட்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் திடீரென்று தனது பேச்சை நிறுத்தி, டீஹைட்ரேஷன் எனப்படும் உடல் வறட்சியால் அவதியுற்ற பாஜக தொண்டர் ஒருவருக்கு உதவுமாறு தனது மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தார்.
பிரதமருடன் 4 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் பயணிப்பர். அந்தக் குழுவில் மருத்துவர், துணை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், சிக்கலான நேரங்களில் பணிபுரியும் மருத்துவ நிபுணரும் இருப்பர். அவர்களிடம் அவசரகால நேரங்களில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களும் இருக்கும்.
அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மார்ச் 27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில், நேற்று முன்தினம் இராண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வரும் 6-ஆம் தேதி 3 வது கட்டமாக அங்கு தேர்தல் நடக்க உள்ளது.