Published : 23,Jul 2017 03:17 AM
மதுவில் விஷம் கலந்து கணவனைக் கொன்ற மனைவி!

மதுவில் விஷம் கலந்துகொடுத்து கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
ஊத்துக்கோட்டையை அடுத்த தொளவேடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் மனைவி இந்துமதி. இரண்டு நாட்களுக்கு முன் சங்கர், வாயில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவரது மனைவி இந்துமதியிடம் விசாரணை நடத்திய போது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்றவர், பின்னர் அவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இந்துமதிக்கு அதே பகுதியை சேர்ந்த அஜீத் (20) என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. அஜீத்தும் இந்துமதியும் ஒன்றாக இருந்ததை சங்கர் பார்த்துள்ளார். இதையடுத்து இருவரையும் அடித்து உதைத்துள்ளார்.
கடந்த 20-ம் இதுபற்றி சங்கருக்கும் இந்துமதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அஜீத்திடம் சொன்னார் இந்துமதி. இருவரும் சேர்ந்து சங்கரை கொல்லத் திட்டமிட்டனர். சங்கருக்கு குடிபழக்கம் உள்ளதால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முடிவு செய்தனர். அதன்படி, விஷம் கலந்த மதுவை சங்கரிடம் கொடுத்து, இனி அஜீத்திடம் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தார் இந்துமதி. நம்பிய சங்கர் மதுவை குடித்தார். பிறகு இந்துமதி ஒன்றும் தெரியாதது போல தனது மாமியார் வீட்டில் போய் தூங்கினார். காலையில் சங்கர் இறந்ததை அடுத்து கதறி அழுதுள்ளார். இது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இந்துமதியையும் அவரது காதலன் அஜீத்தையும் கைது செய்துள்ளனர்.