Published : 31,Mar 2021 04:49 PM

“100 சதவிகித வாக்குப்பதிவு வேண்டும்!” - விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி மாணவி

A-College-Student-from-Puducherry-Union-Territory-Designed-Pamphlet-to-achieve-100-Percent-Voting-in-the-upcoming-Legislative-Assembly-Election-and-she-also-Started-giving-awareness-to-voters-by-distributing-it

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-க்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் துறை அதிகாரிகள் தேர்தலுக்கான பணிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டுச்சீட்டு பிரசுரித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்.

அதில் அவர் தெரிவித்துள்ளது.. 

image

“மரியாதைக்குரிய வாக்காள பெருமக்களுக்கு எனது முதல் வணக்கம்!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் (2021) 100 சதவிகித வாக்குப்பதிவை வேண்டி இந்த திறந்த மடலை எழுதி, வெளியிடுகிறேன். 

*‘நம் ஒரு ஓட்டு என்ன செய்ய போகுது போ’, என்று நினைத்து ஒதுங்கி  செல்பவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். வீதிக்கு ஒருவர் என உங்களைபோல யோசித்து ஒதுங்கினாலே ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் பதிவாகமாலே போகும். 

*ஓட்டு என்பதை ஏன் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் உள்ளது? குழந்தைகளுக்கும் இருந்திருக்கலாமே என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் அது பெற்றோரின், வீட்டு பெரியவர்களின் முடிவாகவும் போயிருக்கும் அல்லவா. அது நமது தன்னிச்சையான தனி உரிமை என்பதால் தான் வாக்குரிமையை 18 வயதானவர்களுக்கு வழங்கி உள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறந்த உரிமையை நாம் விட்டுக்கொடுக்கலாமா?

*அதுவும் இன்றைய கொரோனா சூழலில் நடைபெறும் இந்த தேர்தலில் தொடர்ந்து வாக்கு செலுத்தி வருபவர்களே வாக்குச்சாவடிக்கு செல்ல அஞ்சலாம். எப்படி நாம் சமூக இடைவெளியுடன் வேலைக்கு போவதும், ஷாப்பிங் போவதுமாக கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகிறோமோ அதேபோல கால தாமதமாகும் எனிலும் அதை பொறுத்துக் கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் உங்கள் வாக்குகளை பதிவிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

*தரமான தகுதி வாய்ந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை நம் கையில் இருக்கும்போது அதை தவற விடுவதில் என்ன நியாயம் உள்ளது?

 *சிறந்த வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுத்து வாக்களிப்பது அவரவர் விருப்பம். அதே நேரத்தில் வாக்கினை பதிவு செய்வது அவசியமான கடமை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  

*தேர்தலில் 100 சதவிகித வாக்குகள் பதிவு செய்வதன் மூலம் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அமைய அது உதவும். 

*வெளியூர், வெளிநாடு என புலம் பெயர்ந்த தங்களது சுற்றங்களை உங்கள் வீட்டு விழாவுக்கு வருமாறு எப்படி அன்பு கட்டளையிடுவீர்களோ அதே போல இந்த தேர்தலையும் உங்கள் வீட்டு விழாவாக கருதி அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டு வாக்களிக்க சொல்லி அழைப்பு விடுங்கள்” என சொல்லியுள்ளார். 

image

அவரிடம் பேசினோம், “என் பேர் சிவரஞ்சனி. புதுச்சேரி தான் எனது பூர்வீகம். முதுகலை ஆங்கிலம் படிக்கிறேன். கடந்த 2019 பொது தேர்தலில் தான் முதல் முறையாக தேர்தலில் வாக்கினை செலுத்தினேன். இப்போது இரண்டாவது முறையக வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளேன். வீட்டிலும், செய்திகளிலும் 100 சதவிகித வாக்குப்பதிவு சம்பந்தமான விஷயங்களை அறிந்தேன். அது குறித்து இணையத்தில் தேடியதில் கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவிகிதத்தை அறிந்து கொண்டேன். அப்புறம் தான் மக்களுக்கு என்னால் முடிந்த விழிப்புணர்வை கொடுக்க விரும்பி இந்த துண்டுச்சீட்டை எழுதினேன். அதற்கு எனது அம்மாவும் உதவினார். தொடர்ந்து அதை பிரச்சுரித்தேன். தற்போது விநியோகிக்க தொடங்கியுள்ளேன்” என்கிறார் அவர். 

ஒரு விரல் புரட்சி!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்