[X] Close

மேற்கு வங்க தேர்தல்களில் வன்முறை தொடர்வது ஏன்? - ஒரு ரத்தச் சரித்திரம்

சிறப்புக் களம்,அலசல்

Why-elections-in-West-Bengal-are-invariably-violent--Explained

மேற்கு வங்கத்தில் தேர்தல்களும் வன்முறைகளும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதவையாக இருப்பதன் பின்னணியை சற்றே விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு பாஜக தொண்டர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மேலும், ஜாய்நகர் மற்றும் பாங்குராவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அலுவலகங்களில் பலமான குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. இதில், நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், தேர்தல் நாளன்று வன்முறைகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கும். நாம் நினைத்து பார்க்கும்படிதான் நடக்கவும் செய்தது.

முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் தொடங்கி முதல் ஒரு மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், மேற்கு மிட்னாபூரில் உள்ள சல்போனியில் பாஜக தொண்டர் ஒருவர் ரத்தம் சிந்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் மற்றும் வன்முறைகள் எவ்வாறு பிரிக்க முடியாதவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


Advertisement

இதனை மனதில் வைத்துதான் தேர்தல் ஆணையம், தேர்தலை அம்மாநிலத்தில் எட்டு கட்டமாக நடத்தப்போவதாக அறிவித்தது. போதாக்குறைக்கு சிஆர்பிஎஃப் போலீஸாரின் 944 படைகளை களத்தில் இறக்கியது. ஆனாலும், வன்முறை எப்போது, எங்கு நிகழும் என்பது கணிக்க முடியாமலே உள்ளன. குறிப்பாக ஆளும் திரிணாமுல், பாஜக இடையேயான மோதல்கள் கணிக்க முடியாதவையாக உள்ளன.

image

வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் சிலிகுரியில் திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறிய பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்) இளம் தலைவர் கூர்மையான ஆயுதங்களால் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இதேபோல் வடக்கு மேற்குவங்கத்தில் உள்ள முன்னாள் திரிணாமுல் எம்.எல்.ஏ ஒருவரின் கார் சூறையாடப்பட்டது. இதெல்லாம் முதற்கட்ட வாக்களிப்பின்போது நடந்த சம்பவங்களில் இவை அடங்கும்.


Advertisement

இந்தச் சம்பவங்களை மேற்கோள்கட்டி பேசியுள்ள தெற்கு 24 பர்கானாஸில் உள்ள டயமண்ட் ஹார்பரைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர், ``கட்சித் தலைவர் ஒருவர் எங்களை தற்காத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தவும் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்" என்கிறார். ஆம், அவர் கூறியது போல கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தொடர்ந்து நடந்து வரும் இந்த வன்முறைகளை பொதுவெளியில் கண்டித்தாலும், பலர் தனிப்பட்ட முறையில் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கடைப்பிடிகின்றனர். இது மோதலுக்கு முதல் காரணமாக அமைகிறது. முக்கியமாக பழிக்குப் பழி வாங்கும் செயலாக கருதி இதை பலர் செய்து வருகின்றனர்.

டயமண்ட் ஹார்பரில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கான்வாய் டிசம்பரில் ஒரு பேரணியில் கலந்துகொள்ளப் போயிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவம்தான் ஆரம்பம் என்று கூறலாம். இதன்பின் தொடர் வன்முறைதான். இந்த முறை மட்டுமல்ல, 2011 தேர்தலிலும் இதே நிலைதான் இருந்தது. அப்போது 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட இடது முன்னணி ஆட்சியை விட்டு அகலப்போகும் தருணம். அந்த சமயத்தில் வாக்காளர்களின் பட்டியலைக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் இடது முன்னணி ஈடுபட்டதாக எதிர்கட்சிகளால் குற்றம் சுமத்தப்பட்டன.

மேலும், அப்போது கொலைகள் மற்றும் குண்டு எறி தாக்குதல்கள் சாதாரணமாக நடந்தன. இப்போதும் அது நடக்க தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, மார்ச் 27-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு, வன்முறை தவிர்த்து, பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லை. என்றாலும், சல்போனியில் ஒரு இடது முன்னணி தலைவர் மற்றும் அவரது பாதுகாப்பு வீரர்கள் தாக்கப்பட்டனர். அதேபோல், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் சகோதரர் சவுமேண்டுவின் காரின் விண்ட்ஷீல்ட் சேதமடைந்து அவரது டிரைவர் தாக்கப்பட்டார். புருலியாவைச் சேர்ந்த திரிணாமுல் வேட்பாளர் சுஜோய் பாண்டியோபாத்யாய், பாஜக ஆட்களை சுடுவேன் என மிரட்டினார். இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

தேர்தல் முறைகேடுகளிலும் கட்சிப் பாகுபாடுகள் என்பது இல்லை. பாஜக மற்றும் திரிணாமுல் என இரு கட்சிகளும் தங்கள் சொந்த சக்தியைப் பொறுத்து அதை தங்கள் சொந்த வழியில் காட்சிகளை அரங்கேற்றினார்கள். அதனால்தான் மற்ற நேரங்களைப் போலல்லாமல், இரு கட்சிகளும் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக ஒருவருக்கொருவர் புகார்களைக் கொடுத்து வருகின்றன.

image

மேற்கு வங்கத்தின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பு ஆய்வாளரும், பிசோபநாத் சக்ரவர்த்தி என்பவர், ``மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை முடிவடைவதை நான் காணவில்லை. இது நீங்கள் வைத்திருக்கும் அரசியல் செல்வாக்கு, நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சக்தி ஆகியவற்றை வாக்காளரின் மீது ஈர்க்கும் ஒரு வழியாகும். மேலும், இது எதிரணி சக்திகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான ஒரு வழியாகும்" என்று கூறியிருக்கிறார். இவரின் கூற்றுபோலவே சம்பவங்களும் அரங்கேறி, இந்த ரத்தச் சரித்திரம் தொடர்வதை அறியலாம்.

எனினும், இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் மக்கள், குறிப்பாக பெண்கள், அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க முன்வந்தனர். இதனால் முதற்கட்டத் தேர்தலில் 79.79 சதவீத வாக்குப்பதிவு இருந்தது. வன்முறைகளை தாண்டி மக்கள் வெளிவருவது ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

- செய்திக் கட்டுரை உறுதுணை: India Today


Advertisement

Advertisement
[X] Close