Published : 27,Mar 2021 07:14 PM

பெருந்தொற்று கால தேர்தல்: கடமையை உணருமா அரசியல் கட்சிகள்?

Political-parties-election-campaigns-and-Coronavirus-threats

தமிழகத்தில் இந்த முறை நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், வழக்கம்போல் நடக்கும் தேர்தல் அல்ல; பெருந்தொற்று காலத்தில் நடக்கும் தேர்தல். இதனால், வழக்கத்தைவிட அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதில், கட்சிகளுக்கும் சில கடமைகள் உள்ளன.

கொரோனா தொற்று குறைந்து நன்றாகத்தான் இருந்தது கோவை. எப்போது தேர்தல் அறிவிப்பு வந்ததோ, அரசியல் கட்சியினர் பிரசாரத்தைத் துவங்கினார்களோ அன்று முதல் மீண்டும் தொற்றுப் பரவலும் கூட ஆரம்பித்துவிட்டது. கோவை மட்டுமின்றி இதர இடங்களிலும் இதுபோன்ற நிலைமைதான். தமிழகம் முழுவதும் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 2,000-ஐ தாண்டிவிட்டது.

அரசியல் கட்சிகள் பிரசார நேரத்தை குறைப்பது, கூட்டம் கூட்டுவதை கட்சித் தலைமைகள் தவிர்ப்பது போன்றவற்றை கடைபிடிக்கலாம் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி, கொரோனா பரவல் காரணமாக, முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இப்போது, இந்த ஆண்டு அதே மார்ச் மாதம், மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடவேண்டிய கட்டாயம் வந்துவிடுமோ என்ற அச்சுறுத்தல் அதிகரித்துவிட்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும், செலவிட்ட கோடிக்கணக்கான நிதியும் வீணாகிவிட்டதோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு, இரண்டாவது அலை வீரியத்துடன் பரவத் துவங்கிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது, நாளுக்கு நாள் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு.

image

கொரோனா இவ்வளவு வேகமாக பரவ, பொதுமக்களின் அச்சமின்மையும், சுகாதாரத்துறையின் அலட்சிய போக்கும் மட்டும் காரணமல்ல, அரசியல் கட்சிகளின் பிரசாரமே முக்கிய காரணம் என்கின்றனர், தொற்று நோயியல் நிபுணர்கள். தேர்தல் அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு, முன்பாகவே கிராமசபை கூட்டம், ஊர் கூட்டம், கட்சிக் கூட்டம், பூத் கமிட்டி என கும்பல் சேர்த்து பிரசாரத்தை துவங்கி விட்டனர்.

கூட்டமாக ஆள்களை கூட்டி வந்து, கட்சிக் கொடியையும், சின்னம் போட்ட தொப்பியையும் கொடுத்து அமர வைத்தவர்கள் அவர்களுக்கு, ஐந்து ரூபாய்க்கு ஒரு மாஸ்க் வாங்கி கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், ஜனவரி துவக்கத்தில் நன்றாக குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், மீண்டும் அதிகரித்துள்ளது.

இப்போது தொகுதிகளில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்களின் பிரசார வேனுக்கு பின்னால், நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் அணி வகுத்து செல்வதும், தெருமுனைகளில் கூட்டமாக நின்று பேசும் காட்சிகளை பார்க்க முடிகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நிலையில், ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கேட்கின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுப்பது கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த முறை நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், வழக்கம்போல் நடக்கும் தேர்தல் அல்ல; பெருந்தொற்று காலத்தில் நடக்கும் தேர்தலாகும். சவால்கள் நிறைய உள்ளன. அதனால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் கட்சிகள், தொகுதிகளுக்குள் ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட்டமாக பிரசாரம் செய்யாமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரசார வியூகங்களை அமைத்துக்கொண்டால் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும்; யாருக்கு போடக் கூடாது என, பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துதான் வைத்திருக்கின்றனர். அந்த முடிவை, இனி கூட்டம் கூட்டி நடக்கும் பிரசாரமோ, பொதுக்கூட்ட மேடை முழக்கமோ மாற்றிவிடப் போவதில்லை. அதனால், அரசியல் கட்சியினர், விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- சுதீஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்