[X] Close

குறைவான பட்ஜெட்... இதமான அனுபவம்... - கோடைக்கு உகந்த 4 சுற்றுலா தலங்கள்!

சிறப்புக் களம்,ஹெல்த் - லைஃப்ஸ்டைல்

tourist-places-in-tamilnadu-for-summer-vacation

தகிக்கும் வெயில், வேலை டென்ஷன், பரபரப்பான தினசரி வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி புத்துணர்வு பெற ‘டூர் ப்ளான்’ வைத்திருக்கிறீர்களா? - தமிழ்நாட்டில் குறைந்த பட்ஜெட் செலவில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல சில ஸ்பாட்கள் இங்கே...

image

கொடைக்கானல்:


Advertisement

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. ‘மலைகளின் இளவரசி’ இன்றளவும் இயற்கை ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாள் கொடைக்கானல். எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம் தரும் இடம். அதுதான் கொடைக்கானலின் அடையாளம்.

கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, தூண் பாறைகள், குணா குகைகள், சில்வர் நீர்வீழ்ச்சி, மதி கெட்டான் சோலை, தொப்பித் தூக்கிப் பாறைகள், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செட்டியார் பூங்கா என சொக்கவைக்கும் இடங்கள் எக்கச்சக்கம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு கவர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கொடைக்கானலில் நிறைந்து காணப்படும் வனங்களும், குளுமையான வானிலையும்தான். அதோடு யூகலிப்டஸ் மரங்களும், சோலைக் காடுகளும், பசுமை புல்வெளிகளும்.

காடுகளால் சூழப்பட்ட பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 21 கி.மீ. தள்ளி உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய இயற்கை நன்னீர் ஏரியான இது, அவசியம் காண வேண்டிய இடம். இங்கு செல்வதற்கு வனத்துறையிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். அதேபோல், உங்கள் வாழ்கையில் கண்டிராத ஆச்சரியத்தை கோக்கர்ஸ் நடையின்போது பார்ப்பீர்கள். கோக்கர் என்ற ஆங்கிலேயர் இயற்கையை ரசித்தபடி நடைபயிற்சி செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதைதான் இது. தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களுக்கு நடுவே நடந்து செல்கையில் கீழே உள்ள சமவெளிகள், அவ்வுளவு ரம்மியமாக காட்சி தரும்.

நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் கோக்கர்ஸ் நடையின்போது, முக்கியமான நிகழ்வான வானவில் ஒளிவட்டத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். மேலும், கொடைக்கானல் சோலார் ஆய்வகத்தின் மூலம் நட்சத்திரம் சூழ்ந்த இரவு நேர வானத்தை டெலஸ்கோப் வழியாக நீங்கள் பார்த்து ரசிக்கலாம். கோடைக்காலத்தில் இதமாகவும் பொலிவாகவும் வீற்றிருக்கும் கொடைக்கானல், ஒரு ரம்மியமான இடத்திற்கு சுற்றுலா சென்று வந்த திருப்தியை நிச்சயம் அளிக்கும்.

image

ஊட்டி

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத அழகியல் பூமி. ஊட்டியின் அழகிய நிலப்பரப்பு இங்கிலாந்து கிராமப்புறங்களை நினைவூட்டும் நீண்ட பைன் மரங்கள் நிரம்பிய இடங்கள், அழகிய நீல வான போர்வைக்குக் கீழிருப்பதைப் போன்ற பசுமை தேயிலை தோட்டங்கள், செழிப்பான ஏரிகள், பிரமாண்டமான ரோஜா தோட்டம், மனம் மயங்கும் அரசு தாவரவியல் பூங்கா, அழகு சொட்டும் ஊட்டி ஏரி, இதமான வானிலை எனப் பல கண்கவர் காட்சியமைப்பை தன்னகத்தே கொண்டிருக்கிறாள் இந்த மலைகளின் அரசி.

காண்பதற்கு அருமையான மலையில் அமைதியான ஒரு சிறிய பொம்மை ரயில் பயணத்தை மேற்கொண்டு, அதன் இயற்கை பேரழகை தரிசிக்கும் தருணத்தைப் போன்றதொரு அற்புதத்தை வேறு எதனோடும் பொருத்திப் பார்க்க முடியாது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பயணம், ஊட்டிக்கு செல்லும் ஒவ்வொருவரும் தவறவிடக்கூடாத ஒரு பயணம்.

ஊட்டியில் மிகவும் பிரபலம், தனித்துவம் மிகுந்த உள்ளூர் தயாரிப்பான வீட்டிலியே தயாரிக்கப்படும் சாக்லேட்களை சுவைக்க தவறி விடாதீர்கள். மேலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கால காலனித்துவ நினைவுச் சின்னங்களையும் பார்க்கலாம். ஊட்டியில் மே மாதத்தில் கோலாகலமாக நடத்தப்படும் மலர் கண்காட்சி பிரசித்திப் பெற்றது. ஊட்டியில் மலையேற்றம் மற்றும் பாரா கிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளுக்கும் கோடைக்காலமே சிறந்தது.

நகர்ப்புறத்தின் இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் இருந்து விடுபட்டு, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை ஏற்றிக்கொள்ள ஊட்டி மிகச் சரியான தேர்வு.

imageகுற்றாலம்

அருவிகளில் தண்ணீர் விழாவிட்டால் குற்றாலத்தை ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற ஏக்கம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. இப்போது இல்லை. குற்றாலத்தை ஆண்டு முழுதும் ரசிக்க இருக்கவே இருக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா.

குற்றாலம் ஐந்தருவிக்கு மேலே, இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே, 37 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமைப் படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது சுற்றுச்சூழல் பூங்கா. தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களில் பெரியது இதுவே. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் இதமான சூழல் நம்மை கவ்வி வரவேற்கிறது. ஒவ்வொரு பகுதியையும் நாள்முழுதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.

நீரோட்ட நடைபாதையில் சலசலக்கும் காட்டு ஓடையின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது மனதை இதமாக்குகின்றது. வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள் உள்ளத்தை வசியப்படுத்துகிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மேற்கு நோக்கி பார்த்தால் மேற்குத்தொடர்ச்சி மலையின் சொட்டும் பேரழகும், கிழக்கே நோக்கினால் குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான கிராமங்களும், வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

சாகசப் பிரியர்களுக்கு தீனி போடும் சாகச விளையாட்டுத் திடல், காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம், ஆங்காங்கே வனத்துக்கு நடுவே தமிழ் கலாசாரத்தை பிரதிபலித்து நிற்கும் சிற்பங்கள், ஜாதிக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் விளைந்துக் கிடக்கும் நறுமணத் தோட்டம், பெரணி பூங்கா, மூங்கில் தோட்டம், இயற்கை ஓவியப் பதாகைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, தாழ்தள தோட்டம், நீர் விளையாட்டுத் திடல், பசுமைக் குடில்... இப்படி சொக்கவைக்கும் அம்சங்கள் எக்கச்சக்கம். ஒவ்வொன்றும் கண்களுக்கு இதமும், மனதுக்கும் புத்துணர்ச்சியும் அளித்து அனுப்புகின்றன. அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு திரும்புகையில் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை உணரமுடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக சென்று இயற்கையை தரிசித்து மகிழ ஏற்ற இடம்.

image

மாஞ்சோலை

ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளது என்பதைவிட, பார்க்கும் இடங்களை எல்லாம் ரசிக்கலாம் என்பதே இந்த ஸ்பாட்டின் ஸ்பெஷல். தேயிலை தோட்டங்களை ரசித்தபடி, சுற்றிலும் பிரமிப்பூட்டும் மலைத் தொடர்களையும், பரவசமூட்டும் இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ரசிக்க அருமையான இடம். கட்டுப்பாடான வன மேலாண்மையால் இயற்கை எழில் குறையாத மலைப்பிரதேசமாக காட்சியளிக்கிறது மாஞ்சோலை. 

ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று மாஞ்சோலை வழக்கமான சுற்றுலாத்தளம் அல்ல. களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாஞ்சோலை அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா மற்றும் வாகனப் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 5 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.  அதற்கும் அம்பை வனச்சரக அலுவலகத்தில் முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் பெறவேண்டும். அரசுப் பேருந்தில் செல்ல அனுமதி பெறத் தேவையில்லை. இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. திருநெல்வேலி, தென்காசி, அம்பை பகுதிகளிலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்துகள் நான்கு முறை மாஞ்சோலைக்கு ஏறி இறங்குகின்றன. 

காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி நேரம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மிகக்குறுகலான, சிக்கலான மலைப்பாதை என்பதால் 20 கி.மீ தூரத்தைக் கடக்கவே இரண்டு மணி நேரமாகிறது. அதனால் காலையில் சீக்கிரமாக கிளம்பி மாஞ்சோலையை அடைந்தால் கூடுதல் நேரம் செலவழிக்கலாம். சாப்பிட சிறிய உணவுக்கடைகள் சில உள்ளன. பி.எஸ்.என்.எல். தவிர வேறெந்த மொபைல் சிக்னலும் கிடைக்காது. மாஞ்சோலையில் தங்குவது என்றால் அதற்கும் வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். வனத்துறைக்கு சொந்தமான விடுதிகள் தவிர,  தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. மற்றபடி பார்த்துவிட்டு ஆறு மணிக்கு முன்னதாக மாஞ்சோலையை விட்டு வெளியேறி விடவேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close