Published : 24,Mar 2021 02:23 PM
"நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என்பதை உணர்ந்தேன்!"- தந்தைக்காக குருணால் பாண்ட்யா உருக்கம்

நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என உணர்ந்தேன் என்று இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்பு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குருணால் பாண்ட்யா தனது தந்தை குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.
அறிமுக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அரை சதம் பதிவு செய்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை குருணால் பாண்ட்யா படைத்துள்ளார். அவர் வெறும் 26 பந்துகளில் அரை சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வெற்றிக்கு குருணால் பாண்ட்யாவின் அரைசதம் பெரும் உதவியாக இருந்தது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட அறிமுக வீரராக களம் இறங்கிய குருணால் பாண்ட்யா அதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அதை கவனித்த அவரது சகோதரரும், சக வீரருமான ஹர்திக் பாண்ட்யா ஆறுதல் சொல்லி தேற்றினார்.
Papa, with every ball you were always on my mind and in my heart. Tears rolled down my face as I felt your presence with me. Thank you for being my strength, for being the biggest support I’ve had. I hope I made you proud. This is for you Papa, everything we do is for you Papa ❤️ pic.twitter.com/djQWaytETG
— Krunal Pandya (@krunalpandya24) March 23, 2021
இதனையடுத்து போட்டிக்கு பின்பு குருணால் பாண்ட்யா தனது தந்தை குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். அதில் "ஒவ்வொரு பந்திலும் என்னுடைய மனதிலும், இருதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் என்னுடனேயே இருந்தீர்கள் என உணர்ந்தேன். எனது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு வலிமையாக இருந்ததற்கும், எனக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களை பெருமையடைய செய்து விட்டேன் என நம்புகிறேன். இது உங்களுக்கானது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கானது" என தெரிவித்திருந்தார்.