Published : 23,Mar 2021 12:17 PM

"10 ஆண்டுகளில் எங்களுக்கு என்ன செய்தீர்கள், துணை முதல்வரே?!" - கலங்கும் மலை கிராம மக்கள்

Agamalai-people-suffer-a-lot-because-lack-of-basic-needs

இந்தியா சுதந்திரத்தின் வைர விழாவுக்கு (75 ஆண்டுகள்) தயாராகிவரும் சூழலில், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்காக போராடி வருகின்றனர், அகமலை ஊராட்சி மலை கிராம மக்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் தொகுதிக்கு உட்பட்டதுதான் இந்த ஊராட்சி. தங்களை அரசு கண்டுகொள்ளாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதும், தமிழக துணை முதல்வரின் தொகுதிக்கு உட்பட்டதும்தான் அகமலை ஊராட்சி. ஒங்கி உயர்ந்த மலைகளுக்கு நடுவே கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, குரவன்குளி, அலங்காரம், விக்கிரமாதித்தன் சோலை, சின்னமூங்கில்காடு, பெரியமுங்கில்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பழங்குடி இனமக்கள்.

image

சோத்துப்பாறை அணை வரை மட்டுமே பேருந்து வசதி உள்ளது. சோத்துப்பாறை அணையில் இருந்து 12 கீலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், தங்களுக்கு மருத்துவ வசதி, பள்ளிக்கூட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் தங்களுக்கு கிடைக்காமல் உள்ளதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காபி, மிளகு, வாழை, ஆரஞ்சு, பலா, ஏலக்காய் மற்றும் காய்கறிகள் போன்ற விவசாய விளை பொருள்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியே இங்குள்ள மக்கள் வசிக்கின்றனர். மேலும், இங்கு விளையும் பொருள்களை உரிய நேரத்தில் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதால் அதிக வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

குறிப்பாக, அரசு வழங்கும் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு 3 நாள்கள் காத்திருந்து, பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைப்பகுதிக்கு வந்து வாங்க வேண்டும்; அதை அவர்கள் வீட்டிற்க்கு கொண்டு செல்ல 400 முதல் 500 ரூபாய் செலவு செய்து குதிரைகள் மூலம் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசு வழங்கும் எந்த சலுகையையும் அதிக பணம் செலவு செய்தே தங்கள் மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். விவசாய விளை பொருள்களை தலைச்சுமையாகவும், குதிரைகள் வாயிலாகவும் கொண்டு சென்று வருகின்றனர்.

image

இப்பகுதி மக்களின் மற்றொரு பிரச்னை பள்ளிக்கூட ஆசிரியர் பிரச்னை. மலைப் பகுதியில் அமைந்துள்ள இங்குள்ள பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலும் 2 ஆசிரியர்களும் பணிக்கு வருவதிற்கு தயக்கம் காட்டுகின்றனர். அவர்களும் சிறிது நேரமே இருந்து விட்டு கிளம்பி விடுவதாகவும், இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், இப்பகுதி மக்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்னை, மருத்துவ வசதி. ஆரம்ப சுகாதார மையம் செயல்படுவதற்கு தேவையான வசதிகள் இருந்தும், செவிலியர்கள் நியமிக்கபட்ட போதிலும், இவர்கள் ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து மருந்துகள் வழங்கிவிட்டு, அப்போதே திரும்பி விடுகின்றனர். இதனால், அவசர சிகிச்சை தேவைபடுபவர்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளதாகவும், நோயாளிகளை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி வருவதாகவும், அவ்வாறு வரும் நேரங்களில் வருடத்திற்கு 3 முதல் 5 பேர் உயிரிழப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், தெரு விளக்குகள் எரியாத காரணத்தினால் மாலை வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

image

இந்நிலையில், தேர்தல் நேரங்களில் ஓட்டு கேட்க கூட தங்கள் பகுதிக்கு வேட்பாளர்கள் யாரும் வருவதில்லை எனவும், தேர்தல் நேரங்களில் தங்கள் மலை கிரமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும், சுதந்திர இந்தியாவில் இதுவரை வெற்று வாக்குறுதிகளாகவே உள்ளதாக மலை கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

"கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பிராகவும், முதல்வராகவும், துணை முதலவராகவும் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறையும் தேர்தல் நேரத்தில் சாலை வசதியை செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "எங்களுக்காக இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள், துணை முதல்வர் அவர்களே!?" என்று இந்த மலை கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

image

இதற்கும் மேலும் அரசியல் கட்சிகளின் வாக்குறிதியை நம்ப முடியாது என, தேர்தல் அறிவிப்பிற்கு பின் தொடர்ந்து மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடும், இந்த முறை முற்றிலும் தேர்தலை புறக்கணித்து வாக்குப் பெட்டியில் ஒரு வாக்கு கூட போடாமல் திருப்பி அனுப்பும் அளவிற்கு மலை கிராம மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்தத் தேர்தலுக்கு பிறகு வரும் அரசேனும் தங்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதியை மட்டுமாவது செய்து தர முன்வருமா என எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை முறையான சாலை வசதி இல்லாததால் அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்களை பெறமுடியாமல் தவித்து வருவதாலும், வாழ்வாதாரத்தை இழந்து வருவதால், அடுத்து வரும் அரசாவது தங்களின் அவலமான வாழ்க்கைச் சூழலை மாற்றுமா என்ற எதிர்பார்ப்புடன் மலை கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

- அருளானந்தம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்