ஆஸி..க்கு எதிராக இந்திய அணி புதிய சகாப்தம்... உலகக்கோப்பையை கையில் ஏந்துவாரா மிதாலிராஜ்?

ஆஸி..க்கு எதிராக இந்திய அணி புதிய சகாப்தம்... உலகக்கோப்பையை கையில் ஏந்துவாரா மிதாலிராஜ்?
ஆஸி..க்கு எதிராக இந்திய அணி புதிய சகாப்தம்... உலகக்கோப்பையை கையில் ஏந்துவாரா மிதாலிராஜ்?

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும். அதேபோல, ஆஸ்திரேலிய மகளிர் அணி இல்லாமல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் நடப்பது வரலாற்றில் இது மூன்றாவது நிகழ்வாகும். 

மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதே இலக்கு என்ற எண்ணத்துடன் உலகக் கோப்பை தொடரைத் தொடங்கிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, களத்தில் வீறுகொண்டு எழுந்தது. தொடரை வெல்லக் கூடிய அணிகள் என்று கணிக்கப்பட்ட பட்டியலில் இந்திய அணிக்கு விமர்சகர்கள் கடைசி இடம் கூட கொடுக்கவில்லை. ஆங்கிலத்தில் அன்டர் டாக் (UnderDog) என்று ஒரு சொற்றொடர் உண்டு. அந்த பதத்திலேயே இந்திய அணியை விளையாட்டு விமர்சகர்கள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அடையாளப்படுத்தினர். 

முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியை எளிதாக வென்ற இந்திய அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வென்று ஆச்சர்யம் அளித்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கடினமானது. நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில், அந்த அணியை மிதாலி அண்ட் கோ எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய கேப்டன் மிதாலி ராஜின் அசத்தல் சதம் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தியின் அரைசதம் ஆகியவற்றின் உதவியுடன் 265 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணியை 79 ரன்களில் சுருட்டி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

ஆனால், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் இந்திய அணிக்கு இருந்தது. மகளிர் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஜாம்பவானாக விளங்கும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுமட்டுமல்ல, நடப்பு உலகக் கோப்பை தொடரின் 7 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று அசைக்க முடியாத அணியாக அரையிறுதிப் போட்டிக்கு மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றிருந்தது. போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கூல் மிதாலி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதினால், அது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் பேசினார். லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியை வீழ்த்துவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்காது என்ற எண்ணத்திலேயே ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 

போட்டி நடந்த டெர்பி மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியான மைதானம் என்று அறியப்பட்டது. அரையிறுதிக்கு முன்பாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் விளையாடிய 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியையே ருசித்திருந்தது. இதைக்குறிப்பிட்டே சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற அனுபவம் என்று மிதாலி பேசியிருந்தார். போட்டி நாளான நேற்று டெர்பியில் கனமழை பெய்ய, போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. போட்டிக்கான ரிசர்வ் நாளான வெள்ளியன்றும் டெர்பியில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே வானிலை மையங்கள் அலாரம் அடித்தன. போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாள் ஆகிய இரண்டு நாட்களிலுமே மழையால் போட்டி நடக்கவில்லை என்றால், அதிக போட்டிகள் வென்ற அணி என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். 

ஆனால், வருண பகவான் வழிவிடவே இரு அணிகளுக்கும் தலா 42 ஓவர்கள் என்ற நிலையில் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பேட்டிங் தேர்வு செய்தார். பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த ஸ்மிர்தி மந்தனா மற்றும் பூனம் ராவத் ஆகியோரது விக்கெட்டுகளை 35 ரன்களுக்குள் இழந்து இந்திய அணி தடுமாறியது. இதையடுத்து கைகோர்த்த கேப்டன் மிதாலி மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தது. மிதாலியின் விக்கெட்டை இழந்த பின்னர் ஆட்டத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹர்மன்ப்ரீத் கவுர், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்கினார். முதல் 60 பந்துகளில் 41 ரன்கள் குவித்து மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், அடுத்த 55 பந்துகளில் 130 ரன்கள் குவித்தார். போட்டியின் முடிவில் 115 பந்துகளைச் சந்தித்த ஹர்மன்ப்ரீத் கவுர், 171 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் இதில் அடங்கும். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இரண்டாவது முறையாக உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடந்த 2005ம் ஆண்டில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற மிதாலி, இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோற்றது. ஆனால், தற்போது அதே ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியை இந்திய மகளிர் அணி சந்திக்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 23ல் நடக்கிறது. இதே மைதானத்தில்தான் கபில் தேவ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி முதல்முறையாக உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியது. அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி பெண்கள் கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தை தொடங்க மிதாலி தலைமையிலான இந்திய பெண்கள் அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com