
அமெரிக்காவின் பிரபல பாடகர் செஸ்டர் பென்னிங்டன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ராப் மற்றும் ராக் இசை மூலம் அமெரிக்காவில் வெகுவான ரசிகர்களை ஈர்த்தவர் பென்னிங்டன். உலகம் முழுவதும் தனித்து விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக இவர் முதல் முதலாக குரல் கொடுத்த "ஹைபிரிட் தியரி" என்ற இசை ஆல்பம் உலக அரங்கில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இன் த என்ட்', 'நம்ப்', 'ஷேடோ ஆப் த டே' என அடுத்தடுத்து இவர் உருவாக்கிய இசை ஆல்பங்கள் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்தன.
படிப்படியாக புகழின் உச்சிக்கு முன்னேறிக் கொண்டிருந்த பென்னிங்டன் திடீரென நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்கொலை குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 41 வயதான பென்னிங்டன் போதை மருந்து மற்றும் மதுப் பழக்கத்தில் இருந்து மீள நீண்டகாலமாக போராடி வந்தார். சிறு வயதில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதால், குழந்தைகளை மையப்படுத்தி இசை ஆல்பங்களை உருவாக்கிய அவர் கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நெருங்கிய நண்பரும், சவுண்ட்கார்டன் இசைக்குழுவின் பாடகருமான கிறிஸ் கர்னெலும், கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.