Published : 12,Mar 2021 08:50 AM
பல கட்சிகள் போட்டியிடுவது அதிமுகவிற்கு நல்லது: அமைச்சர் விஜயபாஸ்கர்

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவது அதிமுகவிற்கு சாதகமான விஷயம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் முத்துமாரியம்மன் கோயிலில் கூட்டாக வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்காமல் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றி. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவது அதிமுகவிற்கு நல்ல விஷயம். பலமுனை போட்டியாக களம் இறங்கும் போது எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து அதிமுக அமோக வெற்றி பெறும். மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார்” என்றார்.