Published : 11,Mar 2021 08:09 AM
"மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் வெட்கக்கேடான செயல்" - மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது என்றும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், மம்தா மீது தாக்குதல் நடத்திய குற்றத்தை செய்தவர்கள் உடனடியாக நீதிக்கும் முன் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், மம்தா விரைவாக நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
The shameful attack on @MamataOfficial is an assault on Indian democracy
— M.K.Stalin (@mkstalin) March 10, 2021
The perpetrators of such a crime should be brought to justice immediately. @ECISVEEP &the Police dept should take stringent action to avoid such instances in the future.
I wish Mamata ji a speedy recovery! pic.twitter.com/y6DsgKLfXh
முன்னதாக, மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதற்கு மத்தியில் நந்திகிராம் தொகுதியில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பிருலியா என்ற இடத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, தனது கார் அருகில் மம்தா நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர், திறந்த நிலையில் இருந்த காரின் முன்பக்க கதவை தள்ளியதில் அது மம்தாவின் காலில் பலமாக மோதியது. இதனால் கடும் வலியில் துடித்த மம்தா காரில் ஏற முயன்றபோது, அந்த ஐந்து பேரும் அவரை கீழே தள்ளிவிட்டனர். இதன் காரணமாக அவரது காலில் கடும் வீக்கம் ஏற்பட்டது. அவர்கள் வேண்டுமென்றே தன்னை தள்ளிவிட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, இது திட்டமிட்ட சதி என்று கூறினார். தான் கீழே தள்ளப்படும் போது உள்ளூர் காவலர்களோ அல்லது காவல் கண்காணிப்பாளரோ தனது அருகில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.