
ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.
இதனிடையே படப்பிடிப்பில் பணியாற்றிய சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், ரஜினிகாந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தது. அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த ரஜினி, மருத்துவர்களின் அறிவுரைப்படி அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார்.
இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அது குறித்து வெளியான செய்தியில், அண்ணாத்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம்சிட்டியிலும் இராண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற உள்ளது. முன்னதாக படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், அடுத்ததாக நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.