இனிப்புகளில் கட்சியின் சின்னம்: மேற்கு வங்கத்தில் வித்தியாசமான வாக்கு வேட்டை

இனிப்புகளில் கட்சியின் சின்னம்: மேற்கு வங்கத்தில் வித்தியாசமான வாக்கு வேட்டை
இனிப்புகளில் கட்சியின் சின்னம்: மேற்கு வங்கத்தில் வித்தியாசமான வாக்கு வேட்டை

பிரதமர் மோடி, முதல்வர் மம்தா ஆகியோரின் உருவப்பட இனிப்புகள் மூலம் அரசியல் கட்சிகள் வித்தியாசமான முறையில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க, காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவினாலும் அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் போட்டி. பொதுவாக தேர்தலின்போது வாக்காளர்களின் கவனத்தை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக அரசியல் கட்சிகள் வித்தியாசமான முறையில் பிரசாரத்தை மேற்கொள்ளும்.


வழக்கமான அரசியல் பிரச்சாரம் என்றால் பொதுக்கூட்டங்களை நடத்துவது, பேரணியாக செல்வது, மக்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை சேகரிப்பது. இதைத்தவிர்த்து சமூக வலைதளங்கள் மூலமாக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை கேட்பது, இதுதான் நமக்கு தெரிந்தது. அதேநேரத்தில் மாநிலங்களுக்கு மாநிலம் தேர்தல் பிரசாரம் மாறுபடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை தேர்தலுக்கு வித்தியாசமான முறையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறது அம்மாநில அரசியல் கட்சிகள்.

சூடான தேர்தல் களத்தை திறமையாக பயன்படுத்தும் கொல்கத்தாவில் உள்ள ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்கள் பால், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட 'சந்தேஷ்' எனும் வித்தியாசமான இனிப்பு வகைகளை தற்போது தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் தேர்தல் கோஷங்கள், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தல் கோஷங்களை இனிப்புகளில் பதிவு செய்து அதை வித்தியாசமாக விற்பனை செய்கிறது.


அதுமட்டுமல்லாமல், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, பா.ஜ.க. சின்னம், திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் சின்னம் ஆகியவற்றை இனிப்புகளில் படங்களாக வரைந்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த இனிப்புகளுக்கு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த இனிப்புகள் 250 கிராம் ரூ.170 ஆகவும், கோஷங்கள் எழுதப்பட்ட இனிப்புகள் ரூ.70க்கும் விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொண்டு வந்த இந்த இனிப்புகள் மூலம் பொதுமக்களின் வாக்குகளை கவர்வதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.


ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியின் சின்னங்கள் மற்றும் கோஷங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இனிப்புகளை ஆர்டர் கொடுத்து வாங்கி அவற்றை பொதுமக்களுக்கு வீடு வீடாக வினியோகித்தும், கட்சியின் வேட்பாளர்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். வித்தியாசமான முறையில் மேற்கொள்ளும் இந்த பரப்புரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் இது வாக்குகளாக மாறுமா? இந்த பரப்புரை அரசியல் கட்சிக்கு கைகொடுக்குமா? இல்லையென்றால் இனிப்பு கடை உரிமையாளரின் விற்பனைக்கு மட்டுமே கை கொடுக்குமா? என்பது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் மே இரண்டாம் தேதி தெரியவரும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com