Published : 06,Mar 2021 06:30 PM
“கூவத்தூரில் சசிகலா முன்பு எம்.பி, எம்.எல்.ஏக்கள் சத்தியம் செய்தார்கள்” - கருணாஸ் பேட்டி
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட போது, கூவத்தூர் ரெசார்ட்டில் எம்எல்ஏ-க்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு என்ன நடந்தது? என்பது குறித்து முதல் முறையாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கூவத்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து பேசிய கருணாஸ்,
“எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்பதை உலகமே பார்த்தது. கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது ஜெயலலிதாவின் படத்தின் முன் அகல் விளக்கை வைத்து எம்.பி., எம்எல்ஏ-க்கள் சத்தியம் செய்தனர். என்ன சத்தியம் செய்தனர் என்பது சசிகலாவுக்கும், அதிமுகவினருக்கும் தான் வெளிச்சம். சத்தியம் செய்து சசிகலாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதை மறுக்க முடியுமா?. நானும், தனியரசும் அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் சத்தியம் செய்யவில்லை” என்றார்.