Published : 06,Mar 2021 06:04 PM
தஞ்சை: நடுக்காவேரியில் பைக் மீது கார் மோதியதில் இரு மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு

திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை கடைவீதியில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் உயிரிழப்பு. நடுக்காவேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவையாறை அடுத்துள்ள அரசு தொழிற் பயிற்சி கல்லூரியில், தஞ்சை மணக்கரம்பையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் மற்றும் டவுன் கரம்பையைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரும் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாணவர்கள் இருவரும் தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அம்மன்பேட்டை கடைவீதியில் வரும்போது, தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்த அவர்கள் மீது சுமோ கார் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.