Published : 04,Mar 2021 05:10 PM

மீண்டும் பதற்றம்: ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை தாக்குதல்!

Rocket-fire-hit-an-Iraqi-base-hosting-American-led-troops

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈராக் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், பிப்ரவரி 15ம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்தனர். அதிகம் அறியப்படாத ஷியா பிரிவு பயங்கரவாத அமைப்பான சரயா அவ்லியா அல்-டாம் என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

image

அதனையடுத்து, அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈராக்கின் எல்லையில் அமைந்துள்ள சிரியா நாட்டின் புகமல் நகரில் அமெரிக்க படையினர் அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலியானதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. பலியானவர்கள் அனைவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்த முதலாவது ராணுவ நடவடிக்கை என்பதால், இந்த வான்வழித் தாக்குதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ஈராக்கில் அமெரிக்க படையினர் தங்கி இருந்த ராணுவ நிலை மீது ஏவுகணை குண்டுகளை வீசியுள்ளனர் ஈரான் ஆதரவு படையினர். இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க தரப்பு அன்பர் மாகாணத்திலுள்ள விமான தளத்தில் இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டது எனவும், சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலால் சேதம் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்