Published : 03,Mar 2021 06:39 PM

மோடி, அமித் ஷாவுக்கு எதிராக 'உருவக் கேலி'யை கையிலெடுக்கும் மம்தா!

Mamata-has-taken-to-body-shaming-attack-on-PM-Modi-and-Amit-Shah

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு பாஜகவை எதிர்கொள்வது பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

முதல்வர் மம்தா பானர்ஜி 'பாடி ஷேமிங்' எனப்படும் உருவக் கேலியை கையிலெடுத்துள்ளார். பிப்ரவரி 24 அன்று ஹூக்லி மாவட்டத்தில் நடந்த ஒரு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை 'கோரமானவர்கள்' என்று பொருள்படும்படி விமர்சித்துள்ளார். அதேபோல, பெங்காலி மக்கள் பயன்படுத்தும் கடுஞ்சொற்களைக்கொண்டு அமித் ஷாவை அழைக்கிறார். "ஹோடோல்-குட்கட்", "நடுஷ்-நுடுஷ்", "ஃபியூட்ச்-ஃபாத்துஷ்" உள்ளிட்ட பல்வேறு சொற்களை அவர் பயன்படுத்துகிறார்.

இந்த பெங்காலி வார்த்தைகள் அனைத்துக்குமான பொருள் ஒன்றுதான். அது வீங்கிய உடல் தோற்றம் உடையவர் என்பது. இப்படியான உருவகேலி விமர்சனத்துக்குள் இறங்கியிருக்கிறார் மம்தா. இது மட்டுமல்லாமல், மோடி-ஷா நாட்டை நடத்தும் "டுவைட்டோ-டானோப்" (பேய்-அசுரன்) என்றும் அவர் விவரித்தார். கடந்த காலங்களில், அமித்ஷாவை மம்தா" மோட்டா பாய்" (குண்டு சகோதரன்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பத் தலைவர் அமித் மால்வியா கூறும்போது, "மேற்கு வங்கம் முழுவதும் காவியின் எழுச்சி ஓங்கி நிற்பதால் மம்தா பானர்ஜி பதற்றமடைந்துள்ளார்" என்று தெரிவித்திருந்தார். இதில் முரண் என்னவென்றால், 1990களின் பிற்பகுதியில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக மம்தா குரல் எழுப்பியபோது, அக்கட்சி தலைவர்களால் உருவகேலிக்கு உள்ளாக்கப்பட்டார் மம்தா. மேலும், பலமுறை அக்கட்சியினரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். சொல்லப்போனால் மம்தாவின் கட்சியிலிருக்ககும் அவரது சகாக்கள் கூட அவரை "பாக்லி" (விசித்திரமானவர்) என்று பெயரிட்டு கிண்டல் செய்துள்ளனர்.

image

ஒரு காலத்தில் மம்தாவின் அரசியல் வழிகாட்டியாகவும், இப்போது அவரது அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கும் மூத்த டி.எம்.சி தலைவர் ஒருவர், ஒருமுறை பிரபலமான பெங்காலி படமான "பெடர் மே ஜோத்ஸ்னா" (பாம்பு மந்திரவாதியின் மகள் ஜோத்ஸ்னா) என்று மம்தாவை அழைத்தார். இதன்மூலம் அவர் மறைமுகமாக மம்தாவின் சமூகத்தையும், வம்சாவளியையும் வரையறுக்க முயன்றிருந்தார்.

ஆனால், மம்தா அதிலிருந்து தப்பித்து, தன் மீது வீசப்பட்ட அம்புகளை தூரத் தள்ளி மக்கள் ஆதரவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் எந்த அளவிற்கு தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளானாரோ, அவ்வளவு அனுதாபத்தை அவர் மக்களிடமிருந்து பெற்றார். ஒரு போராட்டக்கரராக அவர் ஒரே மாதிரியாக இருப்பதால் மக்கள் அவரை விரும்பியிருக்கலாம்.

ஓர் எளிய பருத்தி - ஸ்டார்ச் புடவை, ஜோல்னா பையுடன் எளிமையாக வலம் வரும் மம்தாவை மக்கள் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர். கட்சி கூட்டங்களில், மம்தா பெங்கால் பெண்கள் சாதாரணமாக வீடுகளில் உடுத்தும் புடவையை அணிந்து கலந்துகொள்வதன் மூலம் மக்களுக்கு மறைமுகமாக செய்தி ஒன்றை சொல்கிறார். உங்களில் ஒருவராக வந்துள்ள நான் உங்களுக்காக போராடிவருகிறேன் என்பதுதான் மம்தா சொல்லும் செய்தி.

இதன்மூலம் மக்களும் மம்தாவை தங்களுடன் எளிதாக கனெக்ட் செய்து கொள்கிறார்கள். அவர் சாதாரண மக்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் எதிரிகளால் துண்டாடப்படும்போது மேற்கு வங்கத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் மம்தாவுக்கான மவுசு என்பது கூடிக்கொண்டே சென்றது. அப்படி இருந்த மம்தாவே இப்போது உருவக் கேலியை கையிலெடுத்துள்ளார். இது அவருக்கு கைகொடுக்குமா; இல்லை, காலை வாருமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்