Published : 03,Mar 2021 06:00 PM

"கமல் கட்சியை பொருட்படுத்த தேவையில்லை!" - முதல்வர் பழனிசாமி நேர்காணல்

Edappadi-Palanisamy-says-no-need-to-consider-Kamal-party

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

இச்சூழலில், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘தலைவர்களுடன் ஒரு நாள்’ நிகழ்ச்சிக்காக நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பிரசாரக் களத்தில் கலந்துரையாடினார். அதன் சில துளிகள் இங்கே..

கட்சிக்குள்ளும் மக்களிடையேயும் உங்களை ஏற்றுக்கொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"நான் ஒரு தலைவராக எங்குமே சொல்லிக் கொண்டதில்லை. என்னை ஒரு தொண்டராகத்தான் சொல்லி வருகிறேன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவர் மட்டுமே ஒரே தலைவர்கள். காலம் மாறிவிட்டது. மக்களோடு மக்களாக இருந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். இளைய தலைமுறையினரும் அதையேதான் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி வரும் கருத்துக்கள் குறித்து மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியவரும். நானே உட்கார்ந்து பார்ப்பதற்கு நேரமில்லை."

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்குமா?

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் வேறு மாதிரியாக வாக்களிக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் வேறு மாதிரியாக வாக்களிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது கோவை தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதே நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. எனவே நாடாளுமன்றத்திற்கு யார் செல்ல வேண்டும்? சட்டசபையில் யார் அமர வேண்டும்? என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள். எனவே ஆட்சிப் பொறுப்பில் அதிமுக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

அதனால்தான் பல சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, விக்கிரவாண்டி, திமுக வசமிருந்த தொகுதி; நாங்குநேரி, காங்கிரஸ் வசமிருந்த தொகுதி. இந்த இரு தொகுதிகளையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கைப்பற்றியது."

ஆனாலும் 22 தொகுதி இடைத்தேர்தல்களில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதே? அதில் பல தொகுதிகள் அதிமுக வசமிருந்த தொகுதி தானே?

அது நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தாக்கம். தேர்தல் தனியாக வரும்போது அதிமுக தான் வெற்றி பெறும்.

இந்த தேர்தல் இருமுனைப் போட்டியாக இருக்கும் என நினைக்கிறீர்களா? அல்லது மூன்றாவதாக ஒரு அணி உருவாக வாய்ப்புண்டா?

"தற்போது வரை அதிமுக, திமுக என இரண்டு அணிகள்தான் களத்தில் நிற்கின்றன. இந்த இரண்டு அணிகளுக்கிடையேயும்தான் போட்டியாக நான் கருதுகிறேன். கமல்ஹாசனின் வாக்கு சதவீதம் சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தெரிந்துவிட்டது. அதனால் அவர் கட்சியை பொருட்படுத்த தேவையில்லை.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலில் அங்கம் வகித்த கட்சிகளைக் கொண்ட கூட்டணி அப்படியேதான் தொடரும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுவதால், எங்கள் கட்சிதான் முதல்வர் வேட்பாளராக இருக்கும்."

பாஜக அழுத்தத்தில்தான் அதிமுக இருக்கிறது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறதே?

"இது தவறான கருத்து. ஊடகங்கள் கற்பனையாக செய்தி வெளியிடுகின்றன. எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. அதிமுக சுதந்திரமாக இயங்கக்கூடிய கட்சி. அதேபோல் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளும் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்."

image

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ். இருவருக்குமிடையில் இணக்கம் இல்லை என்கிற செய்தி அடிக்கடி அடிபடுகிறதே?

"ஊடகங்கள் விறுவிறுப்புக்காக அப்படி செய்தி வெளியிடுகின்றன. ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகம்தான் தமிழகத்தை ஆளும்’ என்று மாண்புமிகு அம்மா கூறினார்கள். அதை நானும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இணைந்து நிறைவேற்றுவோம்."

வரவிருக்கும் பொதுத்தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும்?

"இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியானதும் கூட்டணி கட்சிகளுடன் கலந்துப் பேசி, அந்த கட்சியின் சக்திக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படும். தொகுதி ஒதுக்கீட்டை சுமூகமாக நடத்தி தேர்தலை இணைந்து எதிர்கொள்வோம்."

கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?

"எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் தொடங்கி, அம்மா ஆட்சிக்காலம் வரைக்கும் கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை. அது இந்தத் தேர்தலிலும் தொடரும். கோவை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம். ஆகவே, கொங்கு மண்டலம் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக திகழும்."

குடும்பத்துடன் உங்களால் நேரம் செலவிட முடிகிறதா?

"குடும்பத்துடன் நேரம் செலவிடும் வயதை கடந்துவிட்டோம். இளவயதில் என்றால் குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். குடும்பத்தை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாது. இருப்பினும் மாதத்திற்கு இரண்டு முறை ஊருக்கு சென்று குடும்பத்தினர், ஊர் மக்களை சந்தித்துவிடுவேன்."

நாற்பதாண்டு கால அரசியல் வாழ்க்கையில் இந்த நான்காண்டுகள் மிகவும் முக்கியமானது இல்லையா? எப்படி பார்க்கிறீர்கள் இந்த மாற்றத்தை?

"ஆரம்பக் காலத்திலிருந்து கட்சிக்காக கடுமையாக உழைத்தவன் நான். அப்படி உழைத்ததால்தான் இந்த உயர்வு கிடைத்திருக்கிறது. உழைப்பு உயர்வை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. ஒரு எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்த காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்போதும் உள்ளேன். கட்சிக்காரர்களின் குடும்ப விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள், ஊர் கோயில் விழாக்களில் தவறாது கலந்து கொள்கிறேன்."

சசிகலாவிற்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை என்று டெல்லியில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி கூற வேண்டிய அவசியம் என்ன?

"அதிமுகவை இணைப்போம் என்று டிடிவி தினகரன் பல்வேறு இடங்களில் தவறான செய்தியை கூறிவந்தார். அதனால்தான் அதை சொல்ல வேண்டியதிருந்தது. அம்மா மறைவுக்குப் பிறகுதான் டிடிவி தினகரன் கட்சிக்கு வருகிறார். அதற்குமுன் அவர் கட்சியிலிருந்து அம்மாவால் நீக்கப்பட்டிருந்தவர்."

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்