[X] Close

'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?

சிறப்புக் களம்,தமிழ்நாடு,தேர்தல் களம்

Rahul-Gandhi-Adventure-Campaign-Is-it-a-strategy-to-attract-youth-votes

படகிலிருந்து திடீரென கடலில் குதித்து பயமின்றி நீந்துகிறார்; பள்ளி மாணவியுடன் போட்டி போட்டு தண்டால் எடுக்கிறார்; வழியில் நுங்கு, இளநீர், டீ உள்ளிட்டவற்றை ருசித்து பார்த்து சுவை நன்றாக இருப்பதாக பாராட்டிவிட்டுச் செல்கிறார்; யூடியூபர்ஸ் உடன் சேர்ந்து காளான் பிரியாணி சமைத்து சாப்பிடுகிறார்... தேர்தல் பரப்புரைகளுக்கு இடையில் ராகுல் காந்தியின் இந்த துறுதுறுப்பான செயல்பாடுகள் இளைஞர்கள் மத்தியில் சற்றே கவனம் ஈர்த்திருக்கிறது என்றால் மிகையல்ல.


Advertisement

மதுரைக்கு வந்து ஜல்லிக்கட்டு பார்த்துச் சென்ற சில நாள்களில், தமிழகத்திற்கு வருகை புரிந்த ராகுல் காந்தி `ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற தலைப்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ‘வாங்க ஒரு கை பார்ப்போம்' என்ற தலைப்பில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

image


Advertisement

தற்போது 50 வயதாகியிருக்கும் ராகுல் காந்தி, பரப்புரைக் களத்தில் ஓர் இளைஞரைப் போல் அவர் வெளிப்படுத்தும் சாகசங்கள், துறுதுறுப்பான சுபாவங்கள், ஃபிட்னெஸ் அடையாளங்கள் எல்லாம் எதற்காக? இளையோர் வாக்குகளை ஈர்க்கும் வியூகமா என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியிடம் கேட்டோம்.

''இது ராகுல் காந்தியின் இயல்பான நடவடிக்கைகள். இளையோர் வாக்குகளை குறிவைத்து இவற்றை எல்லாம் செய்யவில்லை. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களுடன் சகஜமாக பழகுகிறார். தான் எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவர் என்பதை மக்களுக்கு நிரூபிக்கிறார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் ராகுல் காந்தி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறார். இதனால் அவர் மீது தமிழக மக்கள் பாசத்தை கொட்டுகிறார்கள்.

image


Advertisement

பொதுவாக ராகுல் காந்தி இளைஞர்கள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர். தமிழக இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். சமூக ஊடகங்களில் அதைப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியின் இந்த இயல்பான நடவடிக்கைகள் இளைஞர்களை மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் வலுவாக ஊன்றியிருப்பதால் ராகுல் காந்தியின் வீடியோக்கள் வைரலாக வலம் வருகின்றன’’ என்கிறார் அவர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தில் பெரும்பாலும் பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் மட்டுமே ராகுல் காந்தி விமர்சிக்கிறார். அ.தி.மு.க,வைப் பற்றியோ, எடப்பாடி பழனிசாமி அரசையோ அவர் விமர்சிக்கவில்லை. இது ஏன் என்ற கேள்வியை ஜோதிமணியிடம் வைத்தபோது, ‘’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை ஆட்டிப்படைப்பது யார்? பாஜக தானே? எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே தமிழக மக்கள் நினைக்கவில்லை. எனவேதான், மோடியையும் பா.ஜ.க.வையும் அவர் விமர்சிக்கிறார். அதிமுக அரசின் செயல்பாடுகளையும் அவர் விமர்சிக்காமல் இல்லை.

image

சில இடங்களில் அவர்களையும் விமர்சிக்கவே செய்கிறார். தமிழக இளைஞர்களும் தாய்மார்களும் ராகுல் காந்தியை விரும்புகிறார்கள். அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இளைஞர்களுடன் கைகுலுக்கிவிட்டு வந்தபோது, அவரது கை சிவப்பு சிவப்பாக தடித்து இருந்ததைப் பார்த்துவிட்டு, `என்ன ஆச்சு?’ என்று பதற்றத்துடன் அவரிடம் கேட்டோம். `ஒன்றுமில்லை. இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். அந்த அளவுக்கு நம் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்'' என்கிறார் ஜோதிமணி.


Advertisement

Advertisement
[X] Close