
ஆசிரியர்கள் துன்புறுத்தியதால் மனமுடைந்த 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் தலைமறைவாகியுள்ள 4 ஆசிரியர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணியிடைநீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலரும் பரிந்துரைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கிய அவர், உடல்நலக்குறைவினால் போட்டிகளில் விளையாடுவதை சமீபகாலமாக தவிர்த்து வந்துள்ளார். ஆனால், அதனை எதிர்த்த ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததுடன், கைப்பந்து அணியில் கட்டாயமாக விளையாட வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் கை, கால், இடுப்பு உள்ளிட்ட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவிக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சசிகலா, ரம்யா மற்றும் மாணவியின் வகுப்பு ஆசிரியர் பிரேமலதா, தலைமை ஆசிரியர் விநாயகஜெயந்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இதனிடையே, தலைமறைவான ஆசிரியர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.