[X] Close

ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை

இந்தியா,சிறப்புக் களம்

Rahul-Gandhi-and-his-North---South-remark--Explained

கேரள சுற்றுப் பயணத்தில் உள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று திருவனந்தபுரம் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "என் அரசியல் பயணத்தின் முதல் 15 ஆண்டுகளில், நான் வடக்கில் எம்.பியாக இருந்தேன். அங்கே நான் வேறு வகையான அரசியலுக்கு பழகி இருந்தேன். என்னைப் பொறுத்தவரை, கேரளாவுக்கு வருவது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. எனது அரசியல் பயணம் கேரளாவுக்கு மாறியபோது, புத்துணர்ச்சியை தந்தது. இங்குள்ள மக்கள் சமூக பிரச்னைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலோட்டமாக மட்டுமல்ல, சிக்கல்களை விரிவாக அணுகுகின்றனர்" என்று பேசினார்.

ராகுலின் இந்தக் கருத்து பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'நாட்டை பிளவுபடுத்தி பார்க்கிறார்' என்கிற ரீதியில் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். ஏன், அவரின் சொந்தக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்தவர்களே அவரது கருத்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இன்று பேசிய பிரதமர் மோடியும் ராகுல் காந்தியின் வடக்கு - தெற்கு அரசியலுக்கு கடும் எதிர்வினை ஆற்றியிருந்தார். ``காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு பிளவு மற்றும் ஆட்சி என்ற கொள்கை இருந்தது. காங்கிரஸுக்கு பிளவு, பொய் மற்றும் ஆட்சி என்ற கொள்கை உள்ளது. சில சமயங்களில் அவர்களின் தலைவர்கள் பிராந்தியத்திற்கு எதிராக, ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக வைக்கின்றனர்" என்று கூறியதும் கவனிக்கத்தக்கது.


Advertisement

கண்டனங்களைத் தாண்டி, நாட்டின் தெற்கு பகுதிக்கு ராகுல் காந்தி கொடுக்கும் இந்த முக்கியவதும் ஏன்... அதனால் என்ன அவருக்கு பயன், அவர் முன் இருக்கும் சவால்கள் என்ன எனபதை விரிவாகப் பார்ப்போம்.

அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ராகுல் காந்திக்கு மிகவும் முக்கியமானது. இது அவருடைய தலைமைப் பண்பை நிர்மாணிக்கும் தேர்தலாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. மீண்டும் மாநிலங்களில் காங்கிரஸ் கொடியைப் பறக்கவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராகுல்.

image


Advertisement

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவில் காங்கிரஸ் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டும். அம்மாநிலத்தில் பினராயி விஜயன் அரசை காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி வெளியேற்ற தவறினால், ராகுல் மீதான நம்பிக்கை மீண்டும் சரியத் தொடங்கும். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

ராகுல் காந்தி மீது பாஜக கடுமையாக தாக்குதலைத் தொடுத்து வருகிறது. அவரை 'வடக்கு - தெற்கு மாநிலங்களிடையே பிளவை உருவாக்க முயற்சிக்கும் ஒரு சந்தர்ப்பவாதி' என்று குற்றம்சாட்டியுள்ளது. இதனை ராகுல் தீவிரமாக எதிர்கொண்டாக வேண்டும். இந்தத் தேர்தலை தனக்கான சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, காங்கிரஸார் மத்தியில் நம்பிக்கையை விதைத்து மீண்டும் கட்சி தலைவராக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட ராகுல், திருவனந்தபுரத்தில், "நான் 15 ஆண்டுகளாக வடக்கில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். நான் அங்கு வேறு வகையான அரசியலை பழகினேன். என்னைப் பொறுத்தவரை, கேரளாவுக்கு வருவது புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆர்வம் என்றால் வெறுமனே மேலோட்டமாக மட்டுமல்ல, சிக்கல்களை விரிவாக அலசுகிறார்கள்" என்றார்.

ராகுல் காந்தி வயநாடு மற்றும் கேரளாவுடனான தனது உறவை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதில் உறுதியாக உள்ளார். மேலும் அவர் மீண்டும் அமேதி தொகுதிக்கு திரும்ப வாய்ப்பில்லை. மற்றொருபுறம், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் (திமுக உதவியுடன்) பதிவு செய்யும் வெற்றி காங்கிரஸுக்கான மதிப்பை மீளுருவாக்கம் செய்யும் என அவர் நம்புகிறார்.

இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் பதிவு செய்யும் வெற்றி, ராகுலை திறன்மிக்க அரசியல்வாதியாக பரிணமிக்க உதவும். அவரது தனது சொந்த தொகுதியான அமேதியில் செய்த தவறுகளை வயநாட்டில் திருத்திக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தியின் வடக்கு-தெற்கு இடையிலான அரசியல் கருத்துகள் நாட்டை பிளவுபடுத்தும் என்று பாஜக குற்றம்சாட்டுவதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் ராகுல். அதுமட்டுமின்றி, இது காங்கிரஸ் கட்சிக்குள்ளான ஆழமான பிளவுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களின் குழு, கட்சியின் மீதான அதிருப்தி நிலைபாட்டை வெளிப்படுத்தியது. அதில், "வாக்காளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும்" என கபில் சிபல் குறிப்பிட்டிருந்தார். அவர் எந்தத் தலைவருக்கு இந்த ஆலோசனையை கூறினார் என்பதை அதில் பெயரிட்டு கூறவில்லை என்றாலும் அது ராகுல் காந்திக்கான அறிவுரையாகவே கருதப்பட்டது.

காங்கிரஸில் ராகுல் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். ராகுல் காந்தி ஒருபோதும் மூத்தவர்களுடன் பணிபுரிய விரும்பியதில்லை. ஆனால், அவரது தாய் சோனியா காந்தி அப்படி இருக்கவில்லை. அவர் மூத்தவர்களுக்கான மரியாதையை கொடுத்து வந்தார். காங்கிரஸுக்குள்ளேயே இரண்டு தலைமுறையினருக்கான பிரிவு நீடித்து வருகிறது. அதில் இரு தலைமுறையினரிடையே ஒரு தொடர்பைப் பேணி வந்த அகமது படேலின் மரணத்தோடு எல்லாம் முற்று பெற்றது. ராகுலின் பார்வை முழுக்க தனக்கு கம்ஃபர்ட் ஜோனில் இருக்கும் தற்போதைய தலைமுறையுடன்தான்.

ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் எழுச்சி, கட்சி மூத்தவர்களில் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தைகளைத் தொடங்க சுர்ஜேவாலா (Surjewala) சென்னைக்குச் சென்றது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், கட்சியின் சீனியரும், தென் மாநில கட்சிகளுடன் நல்லுறவை பேணி வரும் ஆசாத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சீனியர்களின் புறக்கணிப்பு, காங்கிரஸில் அம்பலமாகியிருக்கிறது.

கேரளாவில் பினராயி விஜயன் வலுவான ஆட்சியை அமைத்திருந்தாலும், கேரள மக்கள் சுழற்சி முறையை விரும்புகிறார்கள். அங்கு, கே.சி. வேணுகோபாலின் எழுச்சி, மற்ற காங்கிரஸ் தலைவர்களான ரமேஷ் சென்னிதலா மற்றும் உம்மன் சாண்டி போன்றவர்களுக்கு அசௌகரியத்தை கொடுத்துள்ளது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுலின் நெருங்கிய உதவியாளர் கே.சி. வேணுகோபால் முதல்வராக நியமிக்கப்படுவாரா என்பது அவர்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருக்கிறது.

ராகுல் காந்திக்கு முன்னதாக பல்வேறு சவால்கள் நிறைந்து கிடக்கின்றன. சீனியர்களின் அரவணைப்புடன் அவர் இதை எதிர்கொண்டாக வேண்டும். தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அவர் தவறவிட்டால் காங்கிரஸ் கரையேறுவது சிக்கல் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close