[X] Close

"எம்பொண்ணு இல்லாம படத்தைப் பார்க்க தைரியம் இல்லை!" - மறைந்த நடிகை சித்ராவின் தாய் பேட்டி

சினிமா,சிறப்புக் களம்

vj-chitra-mother-vijaya-special-interview

மர்ம மரணம் அடைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சினிமாவில் முதன்முறையாக நடித்த ’கால்ஸ்’ திரைப்படம் பிப்ரவரி 26-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ட்ரைலரே 2 மில்லியன் வியூஸைத் தாண்டிச் சென்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சித்ராவின் தாய் விஜயாவிடம் பேசினோம். கண்ணீரோடு பேசினார்...

எப்படி இருக்கிறீர்கள்?

"உயிரோட இருந்தாலும் உயிர் இல்லாத மாதிரிதான் உணர்றோம். எம்பொண்ணு எங்களை விட்டுப்போயி மூணு மாசம் ஆகப்போகுது. ஆனா, தினமும் அவளை நினைச்சி நினைச்சி அழாத நாளில்லை. அவ நினைவுகள்ல இருந்து மீண்டு வரமுடியலை; வரவும் முடியாது. அவ்ளோ பாசமான பொண்ணு.


Advertisement

‘எங்களை ஏண்டி விட்டுட்டுப் போனன்னு கேட்டு அழுவறதா? அன்னைக்கு நைட்டு ஹோட்டல்ல என்னடி நடந்ததுன்னு கேக்குறதா? ஏண்டி இந்த மாதிரி ஒருத்தரை தேர்ந்தெடுத்த?’னு அவக்கிட்ட கேக்கணும்னு தோணுது. சாப்பிடவே பிடிக்க மாட்டுது. நானும் அவ அப்பாவும் தினமும் ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சிட்டு கிடக்குறோம். சுகர், பிபி எல்லாம் இருக்கு.  அழுது அழுது சுகர் ஒருமுறை ஏறிப்போகுது. ஒருமுறை லோ ஆகிப்போய்டுது. இப்படித்தான், நாங்க அனுபவிச்சிட்டு போய்ட்டிருக்கோம். அவ இல்லாததால எதோ ஒரு மைதானுத்துல தனியா நின்னுக்கிட்டிருக்க மாதிரி இருக்கு. தைரியமா வளர்த்துட்டு கடைசியில கோழைன்னு பேர் எடுத்துப் போயிட்டாளேன்னு நினைக்கும்போது இன்னும் வேதனை அதிகமாவுது."

image

சித்ரா நடித்த முதல் படம் வெளியாகப்போகிறதே? 

 “சித்ரா குழந்தையா இருக்கும்போதே துறு துறுன்னு ரொம்ப ஆக்டிவா துணிச்சலா இருப்பா. அதனாலதான், அவளோட ரெண்டரை வயசுலேயே ஸ்கூலில் சேர்த்துட்டோம். நல்லா படிப்பதோட ஞாபக சக்தியும் அவளுக்கு அதிகம். எல்லா கல்ச்சுரல்ஸ் புரோகிராம்லயும் ஆர்வமா போய் கலந்துக்குவா. அதனாலேயே, நடிப்புமேலயும் ஆர்வம் வந்துடுச்சி. சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப நாள் கனவு. சீரியலில் நடிக்க ஆரம்பிச்சவுடனேயே சினிமாவுல நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வந்துச்சி. ஆனா, நல்லக் கதையா பார்த்து நடிக்கணும்னு நிறைய படங்களை அவாய்ட் பண்ணிட்டா. கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சபரி ’கால்ஸ்’ படத்தோட கதையைச் சொன்னார். எங்க எல்லோருக்குமே கதை பிடிச்சிடுச்சி. அதனால, சந்தோஷமா ஓகே சொன்னோம். சித்ராவும் சிறப்பா நடிச்சிக் கொடுத்தா. எப்போப் பாரு படத்தைப் பத்தியே பேசுவா. ’படம் நடிக்கிறது ஈஸியா இருக்குமா. சீரியலில் நடிக்கிறதுதான் கஷ்டமா இருக்கு. சீன்லாம் நல்லா வந்திருக்கும்மா. படம் வெளியாகும்போது வேற லெவலா இருக்கும் பாருங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. சீரியலில் நல்ல நடிகைன்னு பேர் வாங்கிட்டா. சினிமாவிலும் அந்தப் பேரை வாங்க ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருந்தா. அதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுறதுக்குள்ளேயே எம்பொண்ணு வாழ்க்கையை சூனியமாக்கிட்டாங்க."

image

’கால்ஸ்’ படத்தைப் படத்தைப் பார்த்தீர்களா?

"இயக்குநர் வீட்டுக்கு வந்து படத்தோட ட்ரைலரை  போட்டுக்காட்டினாரு. ட்ரைலர் கடைசியில ”அந்த ஆள் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா. நானும் இந்த உலகத்துல ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திட்டிருப்பேனோ என்னவோ? அந்தப் பிரபஞ்சத்துக்குத்தான் வெளிச்சம்”னு எம்பொண்ணு அழுதுகிட்டு சொல்றதைப் பார்த்து என் ஈரக்கொல நடுங்கிடுச்சி. நாங்க படம் இன்னும் பார்க்கல. ஆனா, இயக்குநர் பார்க்க கூப்ட்டுக்கிட்டே இருக்கார். ‘இந்தப் படத்தைப் பார்த்து நீங்க எப்படி ஜீரணிப்பீங்கன்னு தெரியல. அதுதான் எனக்கு பயமா இருக்கு’ன்னு சொன்னார். எம்பொண்ணு இல்லாம படத்தைப் பார்க்க தைரியம் இல்லை. ’படம் ரிலீஸ் ஆகும்போது நாமெல்லாம் போலாம்’னு அடிக்கடி பூரிப்பா சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, இப்போ அவ இல்லாம படத்தை பார்க்க முடியும்னு எனக்கு தோணலை.

திரையில் அவளைப் பார்க்கிறதுக்காக காத்துட்டிருந்தா. இப்போ, ரிலீஸும் ஆகப்போகுது. இதைப் பார்க்க அவ உயிரோட இல்லையேன்னு நினைச்சி அழுவுவதைத் தவிர வேற ஒன்னும் சொல்லத் தெரியலை. இந்த லாக்டவுன் எல்லாம் முடிஞ்சபிறகு தமிழ், தெலுங்குன்னு ரெண்டு படத்துல ஹீரோயினா நடிக்க கமிட்டாயிருந்தா. இப்படியொரு நிலைமை ஏற்படும்னு எதிர்பார்க்கலை."

image

 சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன் கிடைத்திப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

"அவங்க கதையே என்கிட்ட பேசவேணாம். டென்ஷன் ஆகுது."

நீங்கள் வைத்தக் குற்றச்சாட்டுகளை ஹேம்நாத் குடும்பம் பொய் மறுத்துள்ளார்களே?

"நாங்க பொய் சொல்றோமா இல்லையான்னு எல்லாம் கடவுளுக்குத் தெரியும். மக்களுக்குத் தெரியும். ஹேம்நாத்கூட பழகினதே சில மாசம்தான். அதுக்குள்ள என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. என் பொண்ணை கட்டிக்கொடுக்கிறேன்னு சொல்லி தலையாட்டுனது எங்களோட பெரிய தப்பு. அதுக்குத்தான் இந்த தண்டனை. அப்பவே, வேண்டாம்னு சொல்லியிருக்கலாமேன்னு இப்போ வேதனை பட்டுக்கிட்டிருக்கோம். ஷூட்டிங், வீடுன்னு அவ்ளோ சந்தோஷமா இருந்தா. நல்ல உழைப்பாளி."

image

சித்ராவுக்கு கடன் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?

"கடன் இருக்கு என்பது உண்மைதான். கார் லோன், வீட்டு லோன் கடன் எல்லாம் அப்படியேத்தான் இருக்கு. ஆனா, இந்தக் கடன் எல்லாம் அவ உயிரோட இருந்திருந்தா ஒரு பொருட்டே இல்லை. அசால்ட்டா அடைச்சிருப்பாள். லோனை அடைக்க என்ன பண்றதுன்னு தெரியலை. இனிமேல்தான் முடிவு எடுக்கணும். ஹேம்நாத்கிட்ட மாட்டினது மட்டும்தான் பெரிய தப்பு. அவ வாழ்க்கையில  வேற எந்தப் பிரச்னையும் கிடையாது. ஹேம்நாத் வந்தது மட்டும்தான் தப்பு. இல்லனா என் குடும்பம் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்."

நீங்களும் சித்ராவுக்கு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறதே...

"சித்ராவுக்கு நான் எந்த நெருக்கடியும் கொடுக்கல. நாங்க ரெண்டு பேரும்தான் ’பத்திரிகை எப்படி அடிக்கலாம்? கல்யாண செலவுக்கு என்னப் பண்ணலாம்’னு பேசினோம். எந்த நெருக்கடியும் கொடுக்கலை. நான் அப்படி பிரஷர் கொடுத்திருந்தா எம்பொண்ணு என்னைக்கே செத்துப் போயிருப்பா. அவ்ளோ சுதந்திரம் கொடுக்கவேதான் சீரியல், சினிமான்னு நடிக்க ஆரம்பிச்சா."

- வினி சர்பனா

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close