Published : 18,Feb 2021 05:19 PM
“ஆல் க்ளியர்... உண்மை வெல்லும்” திட்டமிட்டப்படி நாளை வெளியாகிறது "சக்ரா" - விஷால் ட்வீட்!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள "சக்ரா" திரைப்படம் நாளை திட்டமிட்டப்படி வெளியாகும் என நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ’சக்ரா’ திரைப்படத்தின் கதையை அப்படத்தின் இயக்குநர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே தெரிவித்து, அந்த படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிடம் ‘சக்ரா' படத்தின் கதையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் இந்த படத்தை உருவாக்கி இருப்பது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் ’சக்ரா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையேற்ற நீதிபதி கார்த்திகேயன், ’சக்ரா’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
All Clear for #Chakra?️
— Vishal Film Factory (@VffVishal) February 18, 2021
Grand Worldwide Release Tomorrow!#ChakraFromTomorrow#ChakraKaRakshak#VishalChakra@VishalKOfficial@thisisysr@ShraddhaSrinath@ReginaCassandra@srushtiDange@AnandanMS15@gobeatroutepic.twitter.com/21Q3DMYhPJ
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தபோது, சக்ரா படத்தின் கதை தொடர்பாக இயக்குனர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என விஷால் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ஆனந்தன் தெரிவித்த கதையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்காத நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்காவிட்டால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் ஆனந்தன் போட்ட ஒப்பந்தத்தை அறிந்தே உள்நோக்கத்துடன் விஷால் படத்தை தயாரித்தாரா என்பது மேற்கொண்ட விசாரணையில் தான் உறுதி செய்ய முடியும் என தெரிவித்தார்.
மேலும், சக்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.
படம் வெளியாகும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 5 வரையிலான வசூல் குறித்து மார்ச் 10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசால் பட நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
All Clear for #Chakra -
— Vishal (@VishalKOfficial) February 18, 2021
Grand Worldwide Release Tomorrow #ChakraFromTomorrow#ChakraKaRakshak#VishalChakrapic.twitter.com/eWxJKrwJ8y
இதனிடையே, நடிகர் விஷால் இன்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் "சக்ரா வெளியாவதற்கான அனைத்து பிரச்னையும் கலையப்பட்டுவிட்டது. திட்டமிட்டப்படி உலகம் முழுவதிலும் நாளை திரைப்படம் வெளியாகும்" என பதிவிட்டு இருக்கிறார்.