[X] Close

'2022-க்கான டீசர்', பாஜக படுதோல்வி...- பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தியா,சிறப்புக் களம்

Analysis-on-Punjab-Municipal-Election-Results-2021

பாஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் ஏழு மாநகராட்சிகளை வென்றது. அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், மொஹாலி, படாலா மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய ஏழு மாநகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. அதிலும், பதிந்தா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பிறகு ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியிடம் இருந்து கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது காங்கிரஸ். இதேபோல், 1,815 வார்டுகளில் 1,199 (நகராட்சி மன்றங்கள்) மற்றும் 350 மாநகராட்சி இடங்களில் 281 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.


Advertisement

காங்கிரஸ் அனைத்து வார்டுகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் சின்னத்தில் போட்டியிட்ட வேளையில், அகாலி தளம், பாஜக மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பல இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்தன.

முன்பைவிட இந்த முறை பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றது. காரணம், பெரிய அளவிலான வன்முறை, இரண்டு மாதங்களுகும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டம் என பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் நடந்த தேர்தல் என்பதால். இதனால், ஒவ்வொரு கட்சியும் கத்தி மேல் நிற்பது போல் தேர்தலை சந்தித்தன.


Advertisement

வேளாண் சட்டங்கள் காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்ட சிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. இதேபோல் மாநிலத்தில் பலமான காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளுக்கு முக்கியப் போட்டியாக வீரியத்துடன் களமிறங்கியது. முதன் முறையாக உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் மாநில எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இருந்தது.

மேலும் 2022-ல் பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு, முன்னோட்டமாகவும் இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து வெற்றியை ருசித்துள்ளன. இதில் காங்கிரஸ் அபார வெற்றியை பெற்றுள்ளது. அகாலி தளமும், ஆம் ஆத்மியும் கூட குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளன. ஆனால் பாஜக, பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் ஆறுதலாக மஜா மற்றும் தோபா பிராந்தியங்களின் சில இடங்களை வென்றது. பாஜகவின் தோல்வி வேளாண் சட்டங்களுக்கு எதிரான கோபத்தின் விளைவாக பார்க்கப்படுகிறது.

பாஜகவின் தோல்வி எவ்வளவு பெரியது?


Advertisement

பாஜகவின் இழப்பின் அளவு மிகவும் பெரியது. வேளாண் சட்டங்கள் காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்ட சிரோமணி அகாலி தளத்தால் தனியாக போட்டியிடும் நிலையில் இருந்த பாஜக, கட்சியை மாநிலத்தில் வளர்க்கும் முயற்சியாக தேர்தல் வேலைகளை செய்தது. மாநகராட்சித் தேர்தலில், வரலாற்று ரீதியாக அபோஹர், ஹோஷியார்பூர் மற்றும் பதான்கோட் போன்ற மத உணர்வு அதிகம் கொண்ட நகரங்களில்கூட பாஜக தோல்விகளை எதிர்கொள்ள நேர்ந்தது. பாஜக எம்.எல்.ஏ.வைக் கொண்ட அபோஹரில், கட்சி 50 வார்டுகளில் ஒன்றைக் கூட வெல்லத் தவறிவிட்டது. மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹோஷியார்பூரில் 50 வார்டுகளில் நான்கு வார்டுகளை மட்டுமே பாஜக வென்றது.

image

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர்களில் ஒருவராக சோம் பிரகாஷ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில், பாஜக நான்கு வார்டுகளை வென்றது. பதான்கோட்டில் ஓரளவு வெற்றியை பதிவு செய்துள்ளது. 50-இல் 11 வார்டுகளை வென்றுள்ளது. ஆனால் காங்கிரஸோ சோலோவாக 37 வார்டுகளில் வெற்றியை அறுவடை செய்துள்ளது. படாலா மற்றும் பதான்கோட் இரண்டு நகரங்களும் பாஜக எம்.பி. சன்னி தியோலின் மக்களவைத் தொகுதியில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து வர்த்தகர்களின் முக்கிய வாக்கு வங்கியின் அதிக செறிவு காரணமாக பாஜக பஞ்சாபில் ஒரு முக்கிய நகர்ப்புற கட்சியாக கருதப்படுகிறது. இதனால் முடிவுகள் நிச்சயம் பாஜகவுக்கு ஏமாற்றத்தை அளிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் - குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர் போன்ற இந்து பெரும்பான்மை மாவட்டங்களில் கூட பாஜக மிகவும் மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது. இது பஞ்சாபில் பாஜக செல்வாக்கு குறைந்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது.

காங்கிரஸின் வெற்றி எவ்வளவு முக்கியமானது?

பதிந்தா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பிறகு ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியிடம் இருந்து கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது காங்கிரஸ். இந்த பதிந்தா ஷிரோமணி அகாலி தளத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரான பிரகாஷ் சிங் பாதலின் மருமகளான ஹர்சிம்ரத் கவுர் பாதல் இந்த மக்களவையில் இருந்து தான் எம்பியாக உள்ளார்.

பதிந்தாவைத் தவிர அபோஹர், படாலா, ஹோஷியார்பூர், கபுர்தலா மற்றும் பதான்கோட் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. மோகாவின் 50 வார்டுகளில் 20-ஐ வென்ற மிகப்பெரிய கட்சியாக இருக்கிறது. எனினும் அங்கு யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இந்த ஆறு நகரங்களில் உள்ள மாநகராட்சி வார்டுகளில் காங்கிரஸ் உடன் ஒப்பிடும்போது 350 வார்டுகளில் 23 வார்டுகளை மட்டுமே ஷிரோமணி அகாலிதளமும், பாஜக மொத்தம் 20 வார்டுகளையும், ஆம் ஆத்மி கட்சி வெறும் 9 வார்டுகளையும் வென்றுள்ளன.

பர்னாலா, துரி, சாம்கவுர் சாஹிப், மலேர்கோட்லா, ஜிராக்பூர், மெஹத்பூர், லோஹியன் காஸ் மற்றும் பில்லூர் போன்ற சிறிய நகரங்களில் நகர்ப்புற கார்ப்பரேஷன் அமைப்புகளிலும் காங்கிரஸ் பெரும்பான்மையாக வென்றுள்ளது.

image

தேர்தல் வெற்றி உணர்த்துவது என்ன?

தேர்தல் உணர்த்தும் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது. பஞ்சாபில் பொதுமக்கள் முக்கியமாக வேளாண் சட்டங்கள் மற்றும் தற்போதைய விவசாயிகளின் போராட்டத்தை கையாளுவதால் பாஜகவுடன் முரண்படுகிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக காட்டுகிறது. வெறும் சீக்கிய சமூகம் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும் பாஜக விவசாயிகளின் எதிர்ப்பு சந்திக்கவில்லை. இந்துகள் ஆதிக்கம் செலுத்தும் நகர்ப்புறங்களில் கூட பாஜக தோல்வியை சந்தித்து இருப்பது, பஞ்சாப் முழுவதும் அக்கட்சிக்கு எதிராக அதிருப்தி இருப்பதை அறிய முடிகிறது.

ஹரியானா, பஞ்சாப் என அடுத்தடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விளைவை பாஜக சந்திக்க தொடங்கியிருப்பதை உணர்த்துகிறது.

2022 சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டமா இந்தத் தேர்தல்?

தேர்தல் வெற்றியை அடுத்து பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ``2022-க்கான டீசர்தான் இது. மாநில மக்களால் அவர்களுக்கு உட்படுத்தப்பட்ட வஞ்சகத்தையும் துரோகத்தையும் மன்னிக்கவோ மறக்கவோ தயாராக இல்லை என்பதை உணர்த்தும் செய்திதான் இந்தத் தேர்தல் முடிவுகள். 2022 தேர்தல் எதிர்கொள்ள தயாராக இருங்கள்" என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். அதேசமயம், முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், #captainfor2022 என்று ட்விட்டரில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ட்ரெண்டிங் செய்யத் தொடங்கினர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வகையில் இப்போது இருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டது காங்கிரஸ்.

மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் வெறுப்பை ஒவ்வொரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் பயன்படுத்தின. அதே முறையை 2022 சட்டமன்றத் தேர்தலிலும் பயன்படுத்த தொடங்கியுள்ளன. ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close